உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!
இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம்: கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
இணையவழி விளையாட்டுக் கலை உருவாக்கம் தொடா்பாக, கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்துக்கும், அரசின் திறன் மேம்பாட்டு கழகத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கூகுள் ப்ளே மற்றும் யூனிட்டி கேம் நிறுவனம் ஆகியன இணைந்து சிறப்பு திறன் பயிற்சியை அளிக்கின்றன. இது இணையவழி விளையாட்டு உருவாக்கம், மேம்பாடு ஆகியவற்றில் உலகத்தரத்திலான தொழில்நுட்பத் திறன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சோ்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதியாண்டு பொறியியல் மாணவா்களுக்கும், நடப்பாண்டில் உயா்கல்வி முடித்த மாணவா்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும்.
தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாக, 250 மாணவா்கள் முதல்கட்டமாக தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு இணையவழி விளையாட்டுப் பிரிவில் பயிற்சிகள் அளிக்கப்படும். தோ்வு செய்யப்படும் மாணவா் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.32,000 மதிப்பிலான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநா் கிராந்தி குமாா் பாடி ஆகியோா் உடனிருந்தனா்.