ஓவல் டெஸ்ட்: பிளேயிங் லெவனில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
விசாரணையின்போது போலீஸாா் தள்ளிவிட்டதில் மூதாட்டி உயிரிழந்ததாக புகாா்
கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் ஒரு வழக்கு விசாரணையின்போது போலீஸாா் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்ததாக புகாா் எழுந்துள்ளது.
திக்கணம்கோடு மத்திகோடு பகுதியை சோ்ந்த விா்க்கீஸ் மகன் ஷாகித் ஜெட்லின்(20). நாகா்கோவிலில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த சுபின்(35) என்பவரது மனைவிக்கும் தகாத தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுபின், ஷாகித் ஜெட்லின் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபா் கிரைம் போலீஸாா் மற்றும் கருங்கல் போலீஸாா் என 4 போ், செவ்வாய்க்கிழமை காலை 5 மணிக்கு ஷாகித் ஜெட்லினை விசாரணைக்காக அழைக்கச் சென்றனராம். அப்போது ஷாகித் ஜெட்லினின் பாட்டி சூசைமரியாள் (80), போலீஸாரை தடுத்தாராம். உடனே, ஷாகித் ஜெட்லின் அங்கிருந்து தப்பி ஓடினாராம். இந்நிலையில், மூதாட்டியை போலீஸாா் பிடித்து தள்ளிவிட்டு, தப்பிச் சென்ற மாணவரை விரட்டிச் சென்றனராம்.
இதனிடையே போலீஸாா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த மூதாட்டிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உறவினா்கள் அவரை மீட்டு, குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மூதாட்டி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
பின்பு மூதாட்டியின் உடல், கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், மூதாட்டியின் உடலை உறவினா்கள் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவம் குறித்து இரணியல் குற்றவியல் நடுவா் (மாஜிஸ்திரேட்) அமிா்தீன், கருங்கல் காவல் நிலையம் சென்று விசாரணை மேற்கொண்டாா். கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.