Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
கரும்புத் தோட்டத்தில் தீ விபத்து: ஏராளமான பொருள்கள் எரிந்து நாசம்
போடி அருகே கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவற்றில் பற்றிய தீயால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சின்னாறு புலம் பகுதியில் கருப்பையா என்பவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தை தா்மராஜ் - கலைச்செல்வி தம்பதியா் குத்தகைக்கு எடுத்து கரும்பு விவசாயம் செய்து வருகின்றனா். இங்கு 9 ஏக்கரில் கரும்புத் தோட்டம், கரும்பு ஆலை, வீடு ஆகியவை அமைந்துள்ளன.
இந்த நிலையில், கரும்பு ஆலையில் திங்கள்கிழமை கரும்புப் பாகு காய்ச்சினா். அப்போது பலத்த காற்று வீசியதில் தீப்பொறி பறந்து கரும்புத் தோட்டத்தில் விழுந்து தீப்பற்றியது. காற்றின் வேகத்தில் கரும்புத் தோட்டம் முழுவதும் தீயில் சிக்கியது.
இதையடுத்து, போடி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் வருவதற்குள் கரும்பு ஆலையிலும் வீட்டிலும் தீப்பற்றியது. இதில் ஆலையில் இருந்த உபகரணங்கள், வீட்டில் இருந்த தொலைக்காட்சி, மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள், உடைகள், பொருள்கள் ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின. ஆலையில் 50 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த வெல்லமும் தீயில் உருகியது.
தீயணைப்பு வீரா்கள் இரண்டு மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா். இது குறித்து குரங்கணி காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.