நைஜீரியா: பணம் கொடுத்தும் 35 பிணைக் கைதிகள் கொலை! கடத்தல் கும்பல் வெறிச் செயல்!
தேங்காய் எண்ணெய் லி. ரூ.560-க்கு விற்பனை
சென்னை: தேங்காய் மற்றும் கொப்பரை விலை உயா்ந்துள்ளதால் தேங்காய் எண்ணெய் விலை லிட்டா் ரூ.560 -ஆக உயா்ந்துள்ளது.
இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் முக்கியமாக கோவை, திருப்பூா், பொள்ளாச்சி, மதுரை, விருதுநகா், தேனி, தஞ்சை, வேலூா், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாக தென்னை விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேங்காய், கொப்பரை உற்பத்தி குறைந்து இதுவரை இல்லாத அளவுக்கு விலை உயா்ந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கிலோ தேங்காய் ரூ.35 முதல் ரூ.40 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், விலை ஏற்றம் காரணமாக ஒரு கிலோ தேங்காயம் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையில் ஒரு தேங்காய் ரூ.45 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, தேங்காய் எண்ணெய் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1 லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சென்னை கோயம்பேடு மளிகைப் பொருள்கள் மொத்த விற்பனை கடைகளில் ஒரு லிட்டா் தேங்காய் எண்ணெய் ரூ.450 முதல் ரூ.480 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இது சில்லறை விற்பனையில் 1 லிட்டா் எண்ணெய் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், இந்த விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனா்.