2025-ல் மட்டும் நிலுவையிலுள்ள நுகர்வோர் வழக்குகள் எண்ணிக்கை 12,000!
சத்தீஷ்கர்: `விரும்பித்தான் சென்றோம்’ - பெண்கள் ; மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது
சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்றும் அவர்களுடன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சுகாமன் என்பவரை சேர்த்து போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாஸ்திரிகள் நாராயன்பூர் என்ற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்கள் 3 பேரை ஆக்ராவிற்கு அழைத்துச் சென்று மதமாற்றத்தில் ஈடுபட முயல்வதாக உள்ளூர் பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த ரவி நிகம் என்பவர் போலீஸில் புகார் செய்தார்.
அப்புகாரின் அடிப்படையில் கன்னியாஸ்திரிகள் உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். கன்னியாஸ்திரிகள் உடன் நின்று கொண்டிருந்த 3 பழங்குடியின பெண்கள் மீட்கப்பட்டு அரசு மையமான சக்தி சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆனால் கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டு இருப்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைது நடவடிக்கைக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் தொடங்கி இருக்கிறது. பஜ்ரங் தளத்தை சேர்ந்த ஜோதி சர்மா இது குறித்து கூறுகையில்,''மூன்று பெண்களையும் அழைத்து சென்றபோது அவர்களிடம் விருப்ப கடிதம் இருக்கிறதா என்று கேட்டோம். கன்னியாஸ்திரிகளும் அக்கடிதத்தை கொடுக்கவில்லை. அப்பெண்களும் கொடுக்கவில்லை. பெண்கள் அழுது கொண்டிருந்தனர். அவர் `தங்களது வீட்டுக்கு செல்லவேண்டும்’ என்று கூறினர்.
தவறாக வழிநடத்தப்படும் இந்து மகள்களை காப்பாற்றுகிறேன். அதை தொடர்ந்து செய்வேன்''என்று கூறினார். ஜோதியும் சேர்ந்துதான் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். ஜோதி மீது 2021ம் ஆண்டு சர்ச் ஒன்றை அடித்து சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ஆக்ராவிற்கு கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்கள் தாங்கள் விரும்பித்தான் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
நாங்கள் விரும்பித்தான் கன்னியாஸ்திரிகளுடன் தங்களது வீட்டு பெண்களை அனுப்பியதாக மூன்று பெண்களின் உறவினர்களும் நாராயன்பூர் போலீஸ் நிலையத்தில் கடிதம் எழுது கொடுத்துள்ளனர். இதனை எஸ்.பி ராபின்சன் உறுதிபடுத்தி இருக்கிறார். அதோடு விசாரணை நடந்து வருவதாகவும், புகாரை உறுதிபடுத்த இன்னும் சில தகவல்களை சேகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆக்ராவிற்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படும் பெண்களின் உறவினர்களும் போலீஸாரின் புகாரை மறுத்துள்ளனர். இது தொடர்பாக ஒரு பெண்ணின் சகோதரி கூறுகையில்,''எங்களது பெற்றோர் இப்போது உயிரோடு இல்லை. ஆக்ராவில் நர்சிங் பயிற்சி எடுத்துக்கொள்ள நான் விரும்பித்தான் எனது சகோதரியை கன்னியாஸ்திரிகளுடன் அனுப்பி வைத்தேன். இதற்கு முன்பு நானும் லக்னோவில் அவர்களோடு பணியாற்றி இருக்கிறேன். இதனால் இப்போது என்னால் சொந்தகாலில் நிற்க முடிகிறது''என்றார்.
மற்றொரு உறவினர் இது குறித்து கூறுகையில்,''எங்களது குடும்பம் 5 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டது. எனது சகோதரியும் விரும்பித்தான் சென்றார். கைது செய்யப்பட்ட கன்னியாஸ்திரிகளை உடனே விடுவிக்கவேண்டும். அவர்களது கைது நியாயமற்றது'' என்று தெரிவித்தார்.

ஆனால் கைது நடவடிக்கையை மாநில முதல்வர் விஷ்ணு தேவ் நியாயப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நாயான்பூரை சேர்ந்த மூன்று பெண்களுக்கு நர்சிங் பயிற்சி கொடுத்து வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர். நாராயன்பூரை சேர்ந்த ஒருவர்தான் 3 பெண்களையும் கன்னியாஸ்திரிகளிடம் ஒப்படைத்துள்ளார். பெண்களை கடத்தி மதமாற்றம் செய்ய முயற்சி நடந்துள்ளது.
பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் இது மிகவும் கடுமையான விஷயம். விசாரணை நடைபெறுகிறது. சட்டம் தன் கடமையை செய்யும்'' என்று பதிவிட்டுள்ளார்.
கன்னியாஸ்திரிகள் உட்பட மூன்று பேர் மீது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஜாமீன் மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வருகிறது. சத்தீஷ்கர் அரசின் நடவடிக்கைக்கு பிஷப் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு கைதானவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாராயன்பூர் நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். கைதான இரண்டு கன்னியாஸ்திரிகளும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர்.