நெல்லை: திருடிய நகையை மீண்டும் வீட்டில் வைத்த திருடன்.. என்ன காரணம்?
டிரம்ப் பேசியது பொய் என மோடி கூறவில்லை: ராகுல் காந்தி கருத்து
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியது பொய் என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இரு நாள்களுக்கு மக்களவையில் நடைபெற்று வந்த விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 29) உரையாற்றியிருந்தார்.
பிரதமர் உரை குறித்து செய்தியாளர்களுடனான சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது,
''இந்தியா - பாகிஸ்தான் போர நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 29 முறை கூறியுள்ளார். ஆனால், டிரம்ப் பொய் கூறுகிறார் என தனது உரையில் எங்கும் பிரதமர் மோடி தெளிவாகக் கூறவில்லை. அவருடைய ஒட்டுமொத்த பேச்சிலும் ஒரு இடத்தில் கூட சீனா குறித்துப் பேசவில்லை.
போரின்போது, பாகிஸ்தானுக்கு சீனா உதவியது என்பது ஒட்டுமொத்த நாட்டிற்கும் தெரியும். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சரோ, பிரதமரோ, தங்கள் உரையில் ஒரு இடத்தில் கூட சீனாவின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை'' என ராகுல் காந்தி விமர்சித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை, தான் நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
ஆகஸ்ட் 21வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனிடையே ஆபரேஷன் சிந்தூர் குறித்து இரு நாள்களுக்கு தொடர்ச்சியாக விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று முதல் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து தொடர்ச்சியாக மக்களவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் குறித்து இரு நாள்கள் நடைபெற்ற விவாதத்திலும், ஒரு இடத்தில் கூட போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு இல்லை என ஆளும் கட்சி உறுப்பினர்கள் குறிப்பிடவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
இதையும் படிக்க |டிரம்ப் ஒரு பொய்யர் என மோடி நாடாளுமன்றத்தில் சொல்வாரா? ராகுல் கேள்வி