விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
``பெரிய நிறுவனங்கள் அபாயங்களை மறைக்கின்றன'' - எச்சரிக்கும் Godfather of AI
செயற்கை நுண்ணறிவின் காட் ஃபாதர் எனக் கருதப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், அதன் வேகமான வளர்ச்சி ஏற்படுத்தும் ஆபத்துகளையும், பெரிய நிறுவனங்கள் அந்த ஆபத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் விளைவுகளையும் குறித்து எச்சரித்துள்ளார்.
ஒன் டெசிஷன் என்ற பாட்காஸ்டில் உரையாடிய ஹிண்டன், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர் AI உடன் தொடர்புடைய மிகப்பெரிய அபாயங்களை நன்கு அறிந்திருந்தாலும், அவற்றை கதவுக்குப் பின்னால் மறைத்துவிட்டு வெளியில் மிகவும் குறைத்துக் காட்டிப் பேசுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

DeepMind நிறுவனத்தின் சி.இ.ஓ டெமிஸ் போன்றவர்களைக் குறிப்பிட்டு பேசிய அவர், "அவர்கள் ஆபத்துகளை உண்மையாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். அதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டும் என நினைகின்றனர்" எனப் பாராட்டினார். டெமிஸ் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவின் ஆபத்துகளைப் பற்றி பேசி வருகிறார்.
AI நிறுவனங்கள் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளருவதாக பேசிய அவர், "நான் வரவிருக்கும் ஆபத்துகளை முன்னரே கணித்திருக்க வேண்டும். எதிர்காலம் என்பது எங்கோ தூரத்தில் இருக்கிறது என நினைத்துவிட்டேன்." என வருந்தினார்.
ஹிண்டன் பத்து ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய கூகுளிலில் இருந்து 2023-ம் ஆண்டு வெளியேறினார். அவரது வெளியேற்றம் கூகுள் அதீத முனைப்போடு செயற்கை நுண்ணறிவை உள்நுழைக்க முயற்சித்ததற்கு எதிரான போராட்டமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் அது அப்படியில்லை எனக் கூறியுள்ளார் ஹிண்டன்.

"நான் ஒரு நேர்மையான அறிவியலாளன். கூகுளில் இருந்து வெளியேறி பல உண்மைகளை சொல்லப் போகிறேன் எனக் கூற மீடியா எதிர் பார்க்கிறது.
"ஆனால் அது அப்படியில்லை. எனக்கு 75 வயதுக்கு மேலாகிவிட்டது, என்னால் முன்னைப்போல துரிதமாக செயலாற்ற முடியவில்லை. ஆனால் அங்கிருந்து வெளியேறியதால் இந்த ஆபத்துகளைப் பற்றி இன்னும் வெளிப்படையாக பேச முடிகிறது" என்றார்.
அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், அதைத் தவறான நபர்கள் பயன்படுத்தும்போது பேரழிவு ஏற்படுமென்றும் எச்சரித்தார்.