"ஆணவப்படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம்; ஒன்றிய அரசுகூட கேட்டது, ஆனால், தமிழ்நாடு அ...
திடீரென மனைவி தாம்பத்திய உறவுக்கு 'நோ' சொன்னால் - காமத்துக்கு மரியாதை 251
அந்தத் தம்பதியருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். கல்லூரி காலத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால், இருவரும் முப்பதுகளின் ஆரம்பத்தில்தான் இருக்கிறார்கள். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால், மனைவி கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இந்த நிலையில், 'தான் ஒரு ஏசெக்ஸுவல்; இனிமேல் என்னால் தாம்பத்திய உறவுகொள்ள முடியாது. உங்களுக்கு வேண்டுமானால் இன்னொரு திருமணம் செய்துகொள்ளுங்கள்' என்று கணவரிடம் சொல்லியிருக்கிறார். என் மனைவி சொல்வது உண்மையாக இருக்குமா எனக் கேட்டிருக்கிறார் அந்தக் கணவர். இவருக்கான பதிலைச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த செக்ஸாலஜிஸ்ட் காமராஜ்.

''ஏசெக்ஸுவல் என்பதும் ஒருநிலைதான். ஆனால், இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதால், இவர்களிடம் பேசினால் மட்டுமே உண்மையானக் காரணத்தைக் கண்டறிய முடியும். மற்றபடி, இவரைப்போல திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு, குழந்தைகளும் இருக்கிற பெண்கள் தங்களை 'ஏசெக்ஸுவல்' என்று சொல்லிக்கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
தனக்கு வந்திருக்கிற செக்ஸுவல் பிராப்ளத்தை சரி செய்யாமலோ, அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ தன்னை ஏசெக்ஸுவல் நம்ப ஆரம்பித்திருக்கலாம். இப்படி நம்ப ஆரம்பிப்பதற்கு முன்னால், இந்தக்காலத்து இயல்புபடி தனக்கு செக்ஸில் விருப்பமில்லாத நிலைபற்றி நெட்டில் தேடியிருப்பார். அது ஏசெக்ஸுவல் நிலைபற்றி சொல்லியிருக்கும்.

சில தம்பதியரில், கணவருக்கு எப்போதும் உச்சக்கட்டம் கிடைத்துவிடும். ஆனால், மனைவிக்கு இது கிடைக்காமலே இருந்திருக்கும். இந்தப் பெண்ணுக்கும், தாம்பத்திய உறவு மகிழ்ச்சியில்லாமல் இருந்திருக்கலாம். பிரச்னை ஆர்கசம் அடையாததுதான் என்பது தெரியாமல், தனக்கு ஏன் செக்ஸ் மகிழ்ச்சி அளிக்கவில்லை என நெட்டில் தேடிபார்த்திருப்பார். அது, அவருடைய பிரச்னைக்குக் காரணம் ஏசெக்ஸுவல் என்று சொல்லியிருக்கும். தனக்கும் அந்தப் பிரச்னைதான்போல. அதனால்தான் செக்ஸில் தனக்கு எந்த மகிழ்ச்சியும் கிடைக்கவில்லை என முடிவு எடுத்திருப்பார்.
சில குடும்பங்களில், மனைவியும் ஆர்கசம் அனுபவிக்க வேண்டுமென்கிற அடிப்படை விழிப்புணர்வு கணவருக்கு இல்லாமல் இருக்கும். மனைவி தன் மனநிலையை இலைமறை காயாக சொன்னாலும், பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களுடைய மகிழ்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். விளைவு, பெரும்பாலான மனைவிகளுக்கு செக்ஸ் மீதே வெறுப்பு வந்துவிடும். சிலர் அதை கோபமாக வெளிப்படுத்துவார்கள். சிலர், 'இன்னிக்குக் கூடாது; தலைவலி; காலையில சீக்கிறம் எழுந்திருக்கணும்' என்று ஏதாவது சாக்கு சொல்லி செக்ஸை தவிர்த்துவிடுவார்கள். அதில் ஒன்றாக 'நான் ஓர் ஏசெக்ஸுவல்' என்று சொல்லி, இந்தப் பெண் கணவரைத் தவிர்த்து வரலாம்.

இதில் இன்னும் ஒரு நிலையிருக்கிறது. கணவர் செக்ஸில் இயல்பைவிட ஆர்வமாக இருப்பார். 'இந்த அறையில்; அந்த இடத்தில்' என எதையாவது புதிதாக முயற்சி செய்துகொண்டே இருப்பார். இதில் மனைவிக்கு விருப்பம் இல்லையென்றால், ஏதோ ஒருகட்டத்தில் இதிலிருந்து தப்பிக்க 'தான் ஓர் ஏசெக்ஸுவல்' என்று சொல்லி தாம்பத்திய உறவை மொத்தமாக தவிர்க்கப் பார்க்கலாம். ஒரு தாம்பத்திய உறவில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் எந்த எல்லையும் கிடையாதுதான். ஆனால், மனைவிக்கு விருப்பமில்லாததையெல்லாம் கணவர் செக்ஸில் தொடர்ந்து செய்துகொண்டே இருந்தாலோ அல்லது மனைவியை செய்யச்சொல்லிக் கட்டாயப்படுத்தினாலோ, அது இந்தக் காலத்தில் இப்படிப்பட்டப் பிரச்னையிலும் முடியலாம் என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதைவிடுத்து, 'எனக்கு நோ சொல்லிட்டு வேற ஏதாவது உறவுல இருப்பாளோ' என்றெல்லாம் யோசித்து, ஏற்கெனவே இருக்கிற சிக்கலை இன்னமும் சிக்கலாக்கிக்கொள்ளக்கூடாது.
இந்த வாசகரின் மனைவி ஒரு பாலியல் மருத்துவரை சந்தித்து, அவருடைய ஆலோசனைப்படி மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்வதோடு சில பயிற்சிகளும் செய்ய வேண்டும். மற்றபடி, 'நான் ஏசெக்ஸுவல்' என்பவர்களிடம் நேரடியாக பேசினால் மட்டுமே அவர்கள் தரப்பு நியாயம் தெரியும். இன்னொரு முக்கியமாக விஷயம், தற்போது பலரும் தாம்பத்திய உறவில் வருகிற பிரச்னைகளுக்கானத் தீர்வை கூகுளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது சொல்வதை அப்படியே நம்பவும் செய்கிறார்கள். பாலியல் மட்டுமல்ல, எந்தப் பிரச்னையென்றாலும், அதில் அனுபவம்கொண்ட மருத்துவரை நாடி ஆலோசனைக் கேளுங்கள். அதுதான் பாதுகாப்பு'' என்கிறார் டாக்டர் காமராஜ்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...