உக்ரைனில் தொடரும் ரஷியாவின் தாக்குதலில் 8 பேர் பலி! 10 குழந்தைகள் உள்பட 82 பேர் ...
`அப்பா எப்ப வருவாங்க...' - இலங்கை கடற்படை அராஜகம்; ஏங்கி அழும் குழந்தைகள்; கலக்கத்தில் மீனவர்கள்!
கடந்த 28/7/2025 அன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களில் ஐந்து பேர் மற்றும் பாம்பன் மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறைபிடித்துச் சென்றனர்.
மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சம்பவம் தொடர்பாக, கைதான மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினோம். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர் ஜஸ்டின் என்பவரின் மனைவி நம்மிடம் பேசுகையில், ``இரவு 10 மணி அளவில் ராமேஸ்வரத்தில் கச்சத்தீவு அருகே எங்களுடைய படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த என் கணவர் ஜஸ்டின், என்னுடைய மகன் மோவின் உட்பட 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். என்னுடைய கணவரையும், எனது மகனையும் ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்களுடைய முதல் படகு இலங்கை கடற்படையால் அழிந்து போனது.
இப்போது தமிழக அரசு கொடுத்த நிவாரண உதவியுடன் எங்கள் வீட்டை தனியார் வங்கியில் அடமானம் வைத்துதான் புதிய படகு வாங்கினோம். புதிய படகிற்கு வாங்கின கடன் அப்படியே உள்ளது. அதற்குள்ளே இப்படி என்றால் நாங்கள் என்ன செய்வது? எப்படி கடனை அடைப்பது? வாழ என்ன செய்வது? எனது இரண்டாவது மகன் கல்லூரியில் படித்து வருகிறான். தற்போது அவனது படிப்பிற்கான செலவை என்னால் எப்படி செலுத்த முடியும்? என் பெண் பிள்ளைக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது தெரியவில்லை ஒன்னும் புரியவில்லை" எனக் குமுறியவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

மீனவர் ஜஸ்டினின் இளைய மகன், ``என்னுடைய அப்பா மற்றும் என்னுடைய அண்ணன் இருவரும் ஒரே நேரத்தில் இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டனர். அவர்கள் உடனடியாக வரவில்லை என்றால் அவர்களுடைய இடத்தில் நான்தான் மீனவ தொழிலை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் . அப்படி நான் தொடங்கினாலும் என் அப்பா அண்ணனின் நிலை எனக்கு வராது என்பது என்ன நிச்சயம்? என் தங்கையின் கல்யாணம் என்ன ஆகும்? நான் படித்து நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது என் கனவு. என்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிட்டதே!" எனத் தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
கைதான மற்றொரு மீனவரின் மனைவி பாஸ்டிலா, ``என் கணவர் பெயர் டெனிஷன். நேற்றைய தினம் கடலுக்குச் சென்ற என் கணவரை இலங்கை கடற்படை கைது செய்ததாக காலையில் செய்திகள் பார்த்து அதிர்ந்து போனேன். எனக்கு இரண்டு சிறு குழந்தைகள் உள்ளனர். ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தை, மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. என் சின்ன பிள்ளைகள் அப்பாவை காலையிலிருந்து தேடிக் கொண்டு, `அம்மா... அப்பா எப்போ வருவாங்க... அப்பா எப்போ வருவாங்க' என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என் கணவருக்கு கடுமையான வயிற்று வலி... 10 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவம் பார்த்தேன்.
அப்போது மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அறுவை சிகிச்சை செய்ய தேவையான காசு என்னிடம் இல்லாததால் நான் அவருக்கு மாத்திரை மட்டும் வாங்கி வீட்டிற்கு அழைத்து வந்தேன். அந்த வலியோடு மாத்திரையை வாங்கிக்கொண்டு அவர் கடலுக்குச் சென்றார். பக்குவமாக கவனிக்க வேண்டிய நிலையில் என் கணவரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று கடலுக்கு போனார்கள் .

ஆனால் இப்போது கைது செய்யப்பட்டு இலங்கையில் உள்ளார். மருத்துவமனை செலவுக்கு வாங்கிய கடனைக்கூட கொடுக்க வில்லை, நான் என்ன செய்வது என் கணவரை எப்படியாவது மத்திய அரசு விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" எனக் கதறினார்.
அப்பகுதியைச் சேர்ந்த மீனவ நல சங்கத் தலைவர் காரல் மார்கஸ் பேசுகையில், ``கடந்த 50 ஆண்டுக்காலமாக மீன்பிடித்து வருகிறோம். அதில் கடந்த 11 ஆண்டுகளாக இலங்கை கடற்படை எங்களை மீன்பிடிக்க விடாமல் கைதுசெய்து, படகுகளை பறித்துக் கொண்டு, சிறையில் அடைத்தும், சிறையில் முறையான உணவு மற்றும் தண்ணீர் வசதி இல்லாமலும், 10 பேர் தங்கும் அறையில் 50 பேரை அடைத்தும், கழிவறை வசதி இல்லாமலும் எங்களை கொடுமை செய்கிறார்கள்.
மாநில அரசாவது எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கி வருகிறார்கள். மத்திய அரசு எங்களுக்கு செவி கொடுக்காமல் இருக்கிறார்கள். மீனவர்கள் தங்களது வீடுகளை அடமானம் வைத்து புதிதாக ஒரு தொழிலை தொடங்குகிறார்கள். ஆனால் அவர்கள் தொடங்கியவுடனே இலங்கை கடற்படையினர் அதனை முடித்து வைக்கிறார்கள்.

எனவே மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் நிலை மாற்ற உதவ வேண்டும், இல்லை என்றால்... `வருங்காலம் வாழும் காலமாக இருக்காது மீனவர்களுக்கு' கைதான மீனவர்களின் குடும்பங்களை நேரில் சென்று பார்த்தபோது அவர்களின் குழந்தைகள் எங்க அப்பா எப்போ வருவாங்க? அப்பா எப்போ வருவாங்க? என்று கேட்கிறார்கள். அதனைப் பார்க்கும் போது எங்கள் கண்கள் கலங்குகின்றன. தயவுசெய்து மத்திய அரசிடம் மீனவர்களை வாழ வைக்கும் வழி செய்யும்படி கேட்டு கொள்கிறோம்" என்றார்.