Sam Altman: "என் மகன் கல்லூரிக்குச் செல்ல மாட்டான்; காரணம்..." - AI எதிர்காலம் குறித்து ChatGPT CEO
செயற்கை நுண்ணறிவு கருவிகள் வளர்ச்சிபெறத் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு துறைகள் மிகப் பெரிய மாற்றங்களைக் கண்டு வருகின்றன.
அடுத்ததாக கல்வியும் இந்தச் சூறாவளியில் சிக்கும் என ஆருடம் கூறியுள்ளார் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன்.

தியோ வோன் என்பவரின் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாம் ஆல்ட்மேன், தனது மகன் கல்லூரிக்குச் செல்லமாட்டான் என்றும் அவர் உருவாக்கிய சேட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவே அடுத்த சில ஆண்டுகளில் கல்வியில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
"சில ஆண்டுகளில் வரும் அடுத்த தலைமுறையினருக்கு கல்வி மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். AI இல்லாத உலகத்தை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.
மேலும் இனி ஒருபோதும் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவை விடப் புத்திசாலிகளாக இருக்க மாட்டார்கள் என்றும், தயாரிப்புகளும் சேவைகளும் மனிதர்களை விட மேன்மையானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் அவர், குறுகிய வீடியோக்களில் (ரீல்ஸ், ஷார்ட்ஸ்) இருந்து கிடைக்கும் டோபமைன் தாக்கம் குழந்தைகளின் வளர்ச்சி குறித்த கவலையை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
அதைவிட, முந்தைய தலைமுறையினர் சமீபத்திய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதும் கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இளம் தலைமுறையினர் சாட் ஜிபிடியை உளவியல் நிபுணர் (தெரபிஸ்ட்) போலப் பாவித்து அவர்களது ஆழமான தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதாகவும், உறவுகளில் உள்ள பிரச்னைகளைக் கூறி தீர்வு கேட்பதாகவும் தெரிவித்தார்.
சாட் ஜிபிடியுடனான உரையாடல்கள் உண்மையான தெரபிஸ்ட் அல்லது வக்கீலிடம் பேசுவதுபோல ரகசியமானது அல்ல என்றும், சட்ட அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக டெலிட் செய்யப்பட்ட உரையாடல்கள் கூட மீண்டும் காட்டப்படலாமென்றும் தெரிவித்தார்.
அத்துடன் தற்போது மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்காக உருவாக்கப்படும் சேட் பாட்கள் எதுவும் மனிதர்களுக்கு இணையான உணர்திறனுடன் இருப்பதில்லை என்பதையும் குறிப்பிட்டார்.