விஜய் வெளியிட்ட ஆப் முதல் தமிழக பாஜக-வில் நிர்வாகிகள் மாற்றம் வரை - Daily Roundu...
``முதல்வருக்கு நோபல் பரிசு, 10 ரூபாய் பாலாஜி, குப்பைக்கு வரி..'' - திமுகவை கடுமையாக விளாசிய இபிஎஸ்
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் , அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணதின் ஒரு பகுதியாக நேற்று சிவகங்கை கழக மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொண்டார்
பொம்மை முதல்வருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்
அப்போது பேசிய அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி "தமிழகத்தில் மோசமான ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் உங்களுடன் ஸ்டாலின் என அரசு பணத்தில் தன்னை விளம்பர படுத்தி வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என நான் கூட வருத்தம் தெரிவித்தேன். ஆனால், அவரோ ஆஸ்பத்திரியில் அமர்ந்து கொண்டு அரசு அதிகாரிகளை அலைத்து ஏதோ தமிழகம் புயல் வெள்ளத்தில் மூழ்கியது போல ஆலோசனை நாடகம் நடத்துகிறார்.
அப்படி அக்கறையோடு ஆலோசனை நடத்தும் முதல்வர் 18 நாள் வெளிநாட்டிற்கு உல்லாச சுற்றுப்பயணம் போகையில் ஏன் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை? இப்போ மட்டும் மருத்துவமனையில் தேர்தல் நாடகம் நடத்துகிறார்." என்றார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழக முதல்வர் தினம் தினம் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து அதற்கு பெயர் வைப்பதில் வல்லவர். அதக்கூட யாராவது சொல்லி கொடுத்திருப்பார்கள் ஏனெனில் அவருக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது. அவர் ஒரு பொம்மை முதல்வர் அதற்கு வேண்டுமானால் நாம் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்" என்று கடுமையாக விமர்சித்தார்.
பத்து ரூபாய் பாலாஜி
டாஸ்மாக் ஊழல் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "இப்போதெல்லாம் பத்து ரூபாய் என்று சொன்னவுடன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் நினைவிற்கு வருகிறார். ஏனெனில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் வீதம் கூடுதலாக விற்பனை செய்து ஒரு நாளை 15 கோடி ரூபாய் கொள்ளை அடித்து தலைமைக்கு கொடுத்துள்ளார், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதுகுறித்து விசாரணை நடந்தப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும்" என்று கூறினார்.
சங்கருக்கு சவால்
மின்கட்டண உயர்வை கண்டித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "முன்பெல்லாம் மின்சாரத்தை தொட்டா தான் சாக் அடிக்கும். ஆனா இப்போ கட்டணத்தை கேட்டாலே சாக் அடிக்குது, புதிதாக தற்காலிக மின்துறை அமைச்சர் பதவி வகிக்கும் சிவசங்கர் அதிமுக ஆட்சியை பார்த்து குறை சொல்கிறார். அவர் தற்போது இரண்டு மாத மின் கட்டணத்தையும் அதிமுக காலத்தில் இருந்த மின் கட்டணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும் மக்களுக்கு எது உண்மை என்று" என சவால் விடுத்தார்.

குப்பைக்கு வரி
காரைக்குடி மாநகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு வரி 100 முதல் 150 சதவிகிதம் அதிகம் வசூல் செய்து வருகிறார்கள், அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்கள் வாழ்வை கேள்விக்குறியாக்குகிறார்கள். மேலும் குப்பைக்கு வரி போட்டு மோசமான ஆட்சி நடத்தி வருகிறார்கள், இதில் மாநகராட்சி மேயர் யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக 30 கோடி ரூபாய்க்கான திட்ட வேலையை செய்து வருகிறார். இது போன்ற பல ஊழல்வாதிகளை அதிமுக ஆட்சி அமைந்த உடன் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சூளுரைத்தார்