ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு...
``46 பிரச்னைகள் உள்ளது என்று 4 ஆண்டுகள் கழித்து சொல்வது திறமையான ஆட்சி அல்ல..'' - எடப்பாடி பழனிசாமி
'மக்களை சந்திப்போம், தமிழகத்தை காப்போம்' என்ற பரப்புரை பயணத்தை சிவகங்கை மாவட்டத்தில் நேற்று தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளித்தார். பாஜக-வினரும் திரளாக கலந்துகொண்டனர்.

பரப்புரை பயணத்தை காரைக்குடியில் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி இரவு சிவகங்கை வந்தார். அங்கு பேசும்போது, "இங்கு கூடிய கூட்டத்தை பார்க்கும் போது அதிமுக சட்டமன்றத் தேர்தல் வெற்றி விழா போன்று உள்ளது.
கருணாநிதியின் வாரிசு ஆட்சி, குடும்ப ஆட்சி, மன்னராட்சிக்கு வரும் தேர்தல் முடிவு கட்டும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடக்காத நாளே இல்லை. சிறுமியர் முதல் வயதானவர்கள் வரை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது, இது திறமையான ஆட்சி அல்ல.

இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதன்மையாக இருக்க ஏராளமான கல்வி நிலையங்களை அதிமுக ஆட்சியில் தொடங்கியதே காரணம். அதிமுக ஆட்சியில் அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டு தேசிய அளவில் பல விருதுகள் பெற்றது.
அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என முழு பூசணிக்காயை ஸ்டாலின் அரசு மறைக்க பார்க்கிறது. ஸ்டாலின் அரசு முடக்கி விட்ட அம்மா மினி கிளினிக் அதிமுக ஆட்சிக்கு வரும்போது மீண்டும் கொண்டு வரப்படும். கலெக்சன், கமிஷன், கரப்சன் தான் திமுக ஆட்சியின் சாதனை.
சட்டமன்றத்தில் அதிமுக அழுத்தம் கொடுத்து, 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டுவரப்பட்டது. எஞ்சியவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கொடுத்து ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார்.

காவிரி- வைகை -குண்டாறு திட்டத்தை மத்திய அரசை எதிர்பார்க்காமல் தமிழக நிதியிலிருந்து அதிமுக தொடங்கியது. அதிமுக ஆட்சி அமைந்த உடன் அத்திட்டம் நிறைவேற்றப்படும். 6000 ஏரிகளை குடிமராமத்து திட்டத்தின் கீழ் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது.
திமுக ஆட்சியில் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டம் ஒரு திட்டம் கூட கிடையாது. திமுக அரசு அதிக கடன் வாங்கியுள்ளதால் கூடுதலாக வரி விதிக்க நேரிடும்.
நடிப்பில் முதல்வர் ஸ்டாலின், சிவாஜி கணேசனையே மிஞ்சி விட்டார். காந்தி பெயரை வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் ஊழல் செய்கிறார்.

திமுக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டம் 50 நாள்களாக சுருங்கி விட்டது. நீட் தேர்வை ரத்து செய்து முதல் கையெழுத்து போடுவதாக கூறியவர்கள் நிறைவேற்றினார்களா?
வேலியை பயிரை மேய்வது போல அஜித்குமார் வழக்கில் காவலர்கள் குற்றம் செய்துள்ளனர். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகம் உள்ளது தமிழகத்தில் தான்.
ஊழலுக்காக ஆட்சி கலைக்கப்பட்டதும் தமிழகம் தான், அதிமுக ஆட்சியில் இரண்டு முறை விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம்.
கிராமங்களில் சிறு கடைகளுக்கும் இனி லைசென்ஸ் வாங்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராமத்தில் அனுமதி வாங்காத கட்டடங்கள் சீல் வைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியின் போது 46 பிரச்சனைகள் உள்ளது என 4 ஆண்டுகள் கழித்து முதல்வர் உணர்ந்துள்ளார்.
100 நாள் வேலைத்திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. மத்திய அரசிற்கு முறையான கணக்கினை தமிழக அரசு கொடுக்கவில்லை. நாங்கள் மத்திய அமைச்சர்களை கேட்டுக் கொண்டதால் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒரு பகுதியாக ரூ.2999 கோடியினை விடுவித்துள்ளனர். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெய்லியர் மாடல் அரசாக திகழ்கிறது" என்று பேசினார்.
இரவு சிவகங்கையில் தங்கி ஓய்வெடுத்த எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்புவனம் சென்று சட்டவிரோத காவலில் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வீட்டிற்கு செல்கிறார், பின்பு கீழடி அருங்காட்சியகத்துக்கு செல்கிறார்