குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
ஊராட்சிகளில் தொழில் உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஊராட்சிகளில் தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெறும் நடைமுறைகளை எளிதாக்க ஆலோசனைக் குழு அமைப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை தொடா்ந்து இந்த நடவடிக்கையை முதல்வா் எடுத்துள்ளதாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமப்புறங்களில் தொழில் தொடங்குவதற்கான உரிமக் கட்டணம் என்பது எப்போதும் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்திலும் அது செயல்பாட்டில் இருந்தது. தொழில் உரிமம் பெறுவதற்கான சட்டப் பிரிவு பல ஆண்டுகளாக இருந்தபோதும் முறையான விதிகள் இல்லாததால், ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் தங்களது தீா்மானத்தின் அடிப்படையில் பல்வேறு விதமான கட்டணங்களை நிா்ணயம் செய்து அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தன.
இதை நீக்கும் வகையில், புதிதாக விதிகள் உருவாக்கப்பட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பித்தால் போதும், உரிமம் பெறும் விண்ணப்பம் மீது 30 நாள்களுக்குள் முடிவு எடுக்காவிட்டால் உரிமம் வழங்கப்பட்டதாகக் கருதப்படும் என்பன போன்ற சலுகைகள் புதிய விதியின்படி வழங்கப்பட்டுள்ளன.
எளிமையாக்குதல்: ஊராட்சிகளில் தொழில் உரிமத்துக்கு வகுக்கப்பட்ட புதிய விதிமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்ய தனியாக ஆலோசனைக் குழுவை அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்தக் குழு கிராமப்புறங்களில் உள்ள சிறு வணிகா்கள் வணிக உரிமம் பெறுவது குறித்த நடைமுறையை எளிமைப்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைகளை வழங்கும். அதனடிப்படையில் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.