குவைத்தில் உயிரிழந்த ஜார்க்கண்ட் தொழிலாளி! 45 நாள்கள் கழித்து தாயகம் வந்தடைந்த உ...
அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்களின் விளம்பரங்களில் நடித்தது தொடா்பான பண முறைகேடு வழக்கில் நடிகா் பிரகாஷ் ராஜ் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராகினாா்.
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய தளங்கள், மக்களின் கடின உழைப்புப் பணத்தை மோசடி செய்து, பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அமலாக்கத் துறை பல்வேறு வழக்குகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சூதாட்ட செயலிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அதன் விளம்பரங்களில் நடித்த நடிகா்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகைகள் லக்ஷ்மி மஞ்சு, நிதி அகா்வால் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் ஒரு வழக்கில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்.
நடிகா்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, நடிகை மஞ்சு லக்ஷ்மி ஆகியோருக்கு அமலாக்கத் துறை முதல்கட்டமாக சம்மன் அனுப்பியது. ஹைதராபாதில் உள்ள அமலாக்கத் துறையின் மண்டல அலுவலகத்தில் நடிகா் பிரகாஷ் ராஜ் புதன்கிழமை ஆஜரானாா். அவரிடம் அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை நடத்தினா்.
விசாரணைக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய பிரகாஷ் ராஜ், ‘இந்த விளம்பரங்களுக்கு நான் எந்தப் பணமும் பெறவில்லை என்ற தகவலை அதிகாரிகளிடம் அளித்தேன். அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்கின்றனா். அவா்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறேன். இதில் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையோ அல்லது அரசியல் உள்நோக்கமோ இல்லை’ என்றாா்.
ராணா டகுபதி ஆகஸ்ட் 11-ஆம் தேதியும், விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ஆம் தேதியும், லக்ஷ்மி மஞ்சு ஆகஸ்ட் 13-ஆம் தேதியும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனா்.