Doctor Vikatan: சளி, மூச்சுத்திணறலுக்கு தைலம், கற்பூரம் தடவுவது உயிரிழப்பை ஏற்பட...
பஹல்காம் தாக்குதல்: "உங்களுக்கு நாட்டை ஆள தகுதியில்லை..!" - மத்திய அரசிடம் கேள்விகளை அடுக்கிய ஆ.ராசா
நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்தூர் பற்றி விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இன்று பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா பேச ஆரம்பிக்கும்போதே ஆளும்தரப்பினர் கூச்சல் எழுப்பினர்.
போர்களில் திமுகவின் பங்கு!
ஆ.ராசா பேசியதாவது, "திமுக தேசிய ஒருமைப்பாட்டுக்காக அறியப்படக் கூடிய கட்சி. நாங்கள் திராவிட நாடு என்ற பெயரில் தனி நாடு கோரிய காலம் இருந்தது. 1962ல் சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க நினைத்தபோது நாங்கள் தனிநாடு கோரிக்கையை கைவிட்டோம். 1971ம் ஆண்டு பாகிஸ்தான் போர் தொடங்கியபோது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி யாரும் ஒப்பிடமுடியாதபடி 5 கோடி வழங்கினார். 1999ல் கார்கில் போர் நடைபெற்றபோது தமிழ்நாடு அரசு சார்பாக 100 கோடி வழங்கினார் கருணாநிதி.

தற்போதும் இந்திய இராணுவத்துக்கு ஆதரவாக முதல் பேரணியை நடத்தியவர் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர் மொத்த நாடும் அதைப் பின்பற்றியது. இந்த பின்னணியில் நான் உங்களுக்கு சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
பஹல்காம் தாக்குதலுக்காக வருந்தினீர்களா?
"நான் பாதுகாப்புத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரும் பேசியவற்றைக் கேட்டேன். துரதிர்ஷ்டவசமாக இந்த குரல்கள் எல்லாமும் அதிக சத்தத்துடன் இருந்தன, ஆனால் அதில் எந்த உள்ளடக்கமும் இல்லை.
இது பிஜேபியின் பழக்கமாகிவிட்டது. அவர்களுக்கு எந்த தலைப்பு கிடைத்தாலும் நேருவையும் இந்திராவையும் ராஜிவையும் கைகாட்டுகிறார்கள். எப்போதுமே ஒப்பிடுவது சரியானதாக இருக்காது.
1962ல் சீனா உடனான போர் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தாலும், நேரு வெளிப்படையாக அதற்கான காரணங்களை முன்வைத்தார். இப்போது என்ன நடக்கிறது?
பஹல்காம் தாக்குதல் நடந்ததற்காக பிரதமர் மோடி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை உங்களில் யாராவது ஒருவர் அதற்காக வருந்தினீர்களா? இல்லவே இல்லை.

உளவுத்துறை எச்சரித்தும் பாதுகாப்பு இல்லாதது ஏன்?
"இன்று நான்கு பேர் (தீவிரவாதிகள்) கொல்லப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் பெருமை கொள்வதாகக் கூறுகிறீர்கள். பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பிறகு அதற்கு காரணமானவர்களை பதிலுக்குக் கொன்றுவிட்டோம், எனவே வெற்றி பெற்றுவிட்டோம் என்கிறீர்கள். இது சரியானதா?
தாக்குதலுக்கு முன்னரே உளவுத்துறை மற்றும் RAW-வின் அறிக்கைகள் பஹல்காமை high-resolution செயற்கை கோள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும் என அரசை வலியுறுத்தியிருக்கின்றன. இது உண்மையில்லையா, யாராவது மறுக்க முடியுமா? நான் சவால் விடுகிறேன், உள்துறை அமைச்சரோ, பிரதமரோ மறுக்க முடியுமா? முடியாது.
உளவுத்துறை, RAW அறிக்கைகள் எச்சரித்த பின்னரும் அங்கு காவல்துறை சார்பாகவோ, பாதுகாப்புத்துறை சார்பாகவோ ஒருவர் கூட இல்லை. உங்களுக்கு அக்கறையே இல்லை.
ராஜ்நாத் சிங் குழந்தை போல பேசுகிறார்...
நாங்கள் ஆர்டிகள் 370-ஐ ரத்து செய்கிறோம். இதற்கு பின்னால் அங்கே துப்பாக்கி சத்தமே கேட்காது என்றீர்கள். அப்படி சொல்லிவிட்டு பாகிஸ்தானுடன் மோதும் நிலைக்கு தள்ளியிருக்கிறீர்கள்.
1999 கிறிஸ்மஸுக்கு முந்தைய நாள் தீவிரவாதிகளால் இந்திய விமானம் கடத்தப்பட்டது. அப்போது வாஜ்பாய்தான் பிரதமர். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்கள் சொன்னபடி நாம் பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை கராச்சியில் கொண்டு சென்று விட்டோம். அதுவும் பத்திரமாக வெளியுறவுத்துறை அமைச்சருடன் விமானம் சென்றது. இது அவமானம் அல்ல. அந்த நேரத்தின் தேவை.

"இதை நம்மால் நியாயப்படுத்த முடியும். ஆனால் நீங்கள் செய்வதை உங்களால் நியாயப்படுத்த முடியுமா? இன்று நம் முன்னால் இரண்டு பிரச்னைகள் உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமைச்சர்கள் இருவேறு கருத்துக்களை கூறி வருகின்றனா். ஒருவர், ஆபரேஷன் சிந்தூரின் கீழ் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனா். போர் முடிந்தது என்று கூறுகிறார். மற்றொரு அமைச்சர், ஆபரேஷன் இன்னும் முடியவில்லை என கூறுகிறார். இதில் எதை நம்புவது. அமைச்சர் ராஜ்நாத் சிங், குழந்தை போல பேசுகிறோர். போரில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதற்கு, 'எத்தனை பென்சில் உடைந்தது, எத்தனை ரப்பர் அழிந்தது என்று பார்க்காதீர்கள், இந்தியா வென்றதை பாருங்கள்' என கூறுகிறார்.
நாங்கள் முடிவைப் பற்றி கவலைகொள்ளவில்லை. ஆனால் எல்லாம் சரியாக நடந்திருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் தவறான வழிமுறைகள் மூலமாகவே முடிவைப் பெறுபவர்களாக இருக்கிறீர்கள். பஹல்காம் தாக்குதலுக்காக வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை?

ராணுவத்தையும் ராவையும் உளவுத்துறையையும் வைத்து என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
"வெளியுறவுத்துறை அமைச்சர் 2,3 நாடுகளைத் தவிர எல்லா நாடுகளும் பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு ஸ்பான்சர் செய்யும் நாடு என்பதை ஏற்றுள்ளன என்றார். ஆனால் ஜி2, ஜி7, ஜி30, பிரிக்ஸ், குவாட் என எந்த அமைப்பும் இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானை கண்டித்து ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் தீவிரவாத தாக்குதலை கண்டிக்கின்றனர், ஆனால் பாகிஸ்தானை கண்டிக்கவில்லை.
அவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்ப்பதாகக் கூட கூறவில்லை. ஆனால் நீங்கள் அவர்களுடம் பயணிப்பதைப் பெருமையாகக் கருதுகின்றீர்கள். என்ன இது.
மற்றொரு நகைச்சுவையை கூறுகிறேன். ட்ரம்ப் போரை நிறுத்தியதாகக் அறிவிக்கிறார். இதை அவர்கள் (பாஜக) மறுக்கிறார்கள். அவர்களால் தனிப்பட்ட விதத்தில் நான் ஒரு இந்தியனாக நாடாளுமன்றத்தில் மிகவும் அவமானமாக உணர்கிறேன். எவ்வளவு தைரியம் இருந்தால் வெளியுறவுத்துறை அமைச்சர், அமெரிக்க துணை அதிபர் இந்திய பிரதமருக்கு அழைத்து பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கும் என எச்சரித்ததாகக் கூறுவார். அதுவரை நீங்கள் என்ன தூங்கிக்கொண்டிருந்தீர்களா? பாகிஸ்தான் தாக்கப்போகிறது என்பதை அமெரிக்க துணை ஜனாதிபதி கூறுகிறார் என்றால் நீங்கள் ராணுவத்தையும் ராவையும் உளவுத்துறையையும் வைத்து என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
உங்களுக்கு நாட்டை ஆள தகுதியில்லை!
"இதை இரண்டாக பிரிப்போம். பஹல்காம் தாக்குதல் முழுமையான உளவுத்துறை தோல்வி. அது உங்களுக்கு நிர்வாகத்தை நடத்த தகுதியில்லை என்பதைக் காட்டுகிறது. இந்த நாட்டை ஆள உங்களுக்குத் தகுதியில்லை. நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமான விஷயம். இதற்கு மேலும் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை கிடையாது.
இரண்டாவது விஷயம், உங்களது ராஜாந்திர உறவுகள் எப்படி இருக்கிறது? நீங்கள் நேருவின் சித்தாந்தத்தை பின்பற்றாதீர்கள், பின்பற்ற மாட்டீர்கள். ஏனென்றால் அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை. ஆனால் குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயை பின்பற்றுங்கள்.
வாஜ்பாய் அனைத்து எதிர்க்கட்சிகளின் கருத்துக்களையும் கருத்தில் கொண்டு உணர்திறனுடன் போரை நடத்தினார். போர் முடிந்த பிறகு ஒரு கமிஷன் அமைத்து, அந்த கமிஷனின் அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதன் மீது இதே இடத்தின் அதன் மீது விவாதம் நடந்தது. ஆனால் நீங்கள் நாடாளுமன்றத்தை முற்றிலுமாக ஒதுக்கிவைக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் ஜனநாயகத்தன்மையுடன் இருக்கிறீர்களா?
உங்களுக்கு ஆள தகுதியில்லை என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டுதான் பஹல்காம் தாக்குதல். ஆப்பரேஷன் சிந்தூர் என்பது ட்ரம்ப்பால் முடித்து வைக்கப்பட்ட முழுமையடையாத ஒரு ராணுவ நடவடிக்கை." என்றார்.