இந்திரா காந்தியின் துணிச்சல் மோடிக்கு இல்லையா? -மக்களவையில் அனல் பறக்க விவாதம்
எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் விவாதம்!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகல் 2 மணிக்கு உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிராக இரண்டாவது வாரமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை இன்றும் வழங்கியிருந்தனர். அவர்களின் கோரிக்கை வழக்கம்போல் நிராகரிக்கப்பட்ட நிலையில், அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கியது.
மக்களவையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று தொடங்கும் விவாதத்துக்கு 16 மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மக்களவையில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றவுள்ளனர்.