12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமை கவனித்து வருவதாக மத்திய அரச...
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு: ஆ. இராசா
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறியது வெட்கக்கேடு என மக்களவையில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசியுள்ளார்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ. இராசா பேசுகையில்,
"திமுக என்பது தேச ஒற்றுமைக்கான கட்சி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களை தேச விரோதிபோல சித்தரிக்க முயற்சி நடக்கிறது.
பாஜகவினர் எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர். அவர்கள் மீது பழிபோடுவதுதான் பாஜகவினருக்கு வாடிக்கை. கடந்த கால ஆட்சிகளை ஒப்பிட்டு மட்டுமே பேசுகின்றனர். நேருவைப் போல ஒரு பிரதமர் யாரும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது.
பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கூறிவிட்டால் சரியாகிவிடுமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?
விதி 370 பிரிவைக் கொண்டு வந்த பிறகு காஷ்மீரில் சண்டை இருக்காது, துப்பாக்கிச் சத்தம் இருக்காது என்றெல்லாம் கூறினார்கள். பஹல்காம் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம்.
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த நாடுகள் ஒன்றுகூட பாகிஸ்தானுக்கு எதிராக பேசவில்லை.
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறுகிறார், ஆனால் மத்திய அரசு அதை மறுக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் கூறியது வெட்கக்கேடு. ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்படுகிறேன்.
தாக்குதல் தொடர்பாக அமைச்சர்கள் பேசியதில் பல குழப்பங்கள் இருக்கின்றன. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.
அமெரிக்க துணை அதிபர், இந்தியப் பிரதமரை அழைத்து, பாகிஸ்தான் தாக்குதல் நடக்கப்போவதாகக் கூறுகிறார். இது உங்களுக்கு வெட்கம் இல்லையா?
கார்கில் போரின்போது வாஜ்பாய் ஒரு விசாரணைக்குழுவை அமைத்து அறிக்கையை நாடளுமன்றத்தில் வழங்கினார். குறைந்தபட்சம் உங்கள் தலைவர் வாஜ்பாயின் வழிமுறைகளையாவது பின்பற்றுங்கள். பஹல்காம் தாக்குதல் நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது.
தாக்குதல் முடிந்துவிட்டதாக ஒரு அமைச்சரும் தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒரு அமைச்சரும் கூறுகிறார். இதில் எது உண்மை?" என்று பேசியுள்ளார்.