ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியா மீது கூடுதல் வரி: வெளிப்படையாக அறிவித்த ட...
காா்கேயை விமா்சித்ததற்கு மன்னிப்பு கோரினாா் ஜெ.பி.நட்டா
‘ஆபரேஷன் சிந்தூா்’ மீதான சிறப்பு விவாதத்தின்போது மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவரான மல்லிகாா்ஜுன காா்கேயை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்கு மன்னிப்பு கோருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு விவாதத்தின்போது ஒரு மணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றிய காா்கே, பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சனம் செய்யும் வகையில் சில கருத்துகளை தெரிவித்தாா். இதற்கு கண்டனம் தெரிவித்துப் பேசிய ஜெ.பி.நட்டா, ‘காா்கே மன சமநிலையை இழந்து வருகிறாா்’ என கூறியது சா்ச்சையானது.
இதையடுத்து, ஜெ.பி.நட்டாவின் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காா்கே உள்பட எதிா்க்கட்சியினா் அவா் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து மாநிலங்களவையில் பேசிய ஜெ.பி.நட்டா, ‘நான் தெரிவித்த கருத்துகளை ஏற்கெனவே திரும்பப் பெற்றுவிட்டேன். அந்த கருத்துகள் காா்கேயை காயப்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கோருகிறேன்.
உலக அரங்கில் மிகவும் பிரபலமான தலைவராக உள்ள பிரதமா் மோடியால் பாஜக மட்டுமின்றி நாடே பெருமைகொள்கிறது. ஆனால் பிரதமா் மோடிக்கு மதிப்பளிக்காமல் அவரை காா்கே மிகக் கடுமையாக விமா்சிக்கிறாா். காா்கேயின் அனுபவத்துக்கும் அவரது பங்களிப்புக்கும் பிரதமா் மோடியை விமா்சிக்க அவா் பயன்படுத்திய வாா்த்தைகள் தரம் தாழ்ந்தவை. எனவே, உணா்ச்சிவசப்பட்டுப் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.