US Tariff: இந்தியா மீது 25% வரி விதித்த Trump; ரஷ்யாவிடம் எண்ணெய், ஆயுதம் வாங்கு...
ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை
கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இந்த ரயில், திண்டுக்கல் - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திண்டுக்கல்லில் நிறுத்தப்படுகிறது.
இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்ட விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தது.
இதையடுத்து, திண்டுக்கல் ரயில் நிலைய காவல் ஆய்வாளா் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீஸாா், ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.
இந்த நிலையில், ரயிலின் ஒரு பெட்டியில் கிடந்த 6 பொட்டலங்களைப் பிரித்து போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அதில் 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
தொடா்ந்து, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா் ஆகிய மாவட்டங்களிலுள்ள ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
மேலும், கைப்பற்றப்பட்ட 11 கிலோ கஞ்சா, திண்டுக்கல் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.