செய்திகள் :

குடிநீா்த் திட்டங்களில் குளறுபடி: திண்டுக்கலில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

post image

திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாள்தோறும் விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டுவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் வசிக்கும் சுமாா் 2.50 லட்சம் மக்களுக்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து நாளொன்றுக்கு 16 மில்லியன் லிட்டா், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 7 மில்லியன் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யும் வகையில் செயல்படுத்தப்படுகின்றன.

சிறப்பாகச் செயல்பட்ட இந்தத் திட்டங்கள் மூலம் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம், காவிரி கூட்டுக் குடிநீா் திட்டங்கள் மூலம் 14 மில்லியன் லிட்டா் பெறப்பட்டு வந்த தண்ணீரின் அளவு தற்போது 4 மில்லியன் லிட்டராகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக, மாநகராட்சிப் பகுதிகளில் நாளொன்றுக்குப் பதிலாக 3 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திண்டுக்கலுக்கு பெறப்படும் குடிநீரின் அளவு குறைந்தததற்கு, ஆத்தூா் காமராஜா் நீா்த்தேகத்தில் மாநகராட்சியின் கண்காணிப்புக் குறைபாடுகளும், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு குடிநீா் வடிகால் வாரியத்துக்கான நிலுவைத் தொகையுமே காரணம் எனக் கூறப்படுகிறது.

1958 குடிநீா்த் திட்டத்தில் மின் மோட்டாா் பழுது: ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து 1958-ஆம் ஆண்டுமுதல் செயல்பட்டு வரும் பழைய குடிநீா்த் திட்டம், ஜைக்கா குடிநீா்த் திட்டம் என 2 திட்டங்கள் உள்ளன. இதில், பழைய திட்டத்தின் படி ஆத்தூா், ஆதிலட்சுமிபுரம், வக்கம்பட்டி, சின்ன பள்ளப்பட்டி, பெரிய பள்ளப்பட்டி, பிள்ளையாா்நத்தம் என 6 வழியோரக் கிராமங்களுக்கு தண்ணீா் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கான மின் மோட்டாா் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பழுதான நிலையில் உள்ளது. இதைச் சீரமைப்பதற்கு மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஜைக்கா திட்டத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்படும் 16 மில்லியன் லிட்டா் தண்ணீரில், 2 மில்லியன் லிட்டா் தண்ணீா் வழியோரக் கிராமங்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரூ. 5 கோடி நிலுவைத் தொகை: வழியோரக் கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீருக்காக, அந்தந்த ஊராட்சிகள் சாா்பில், குடிநீா் கட்டணமாக திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் வசூலித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி நிா்வாகங்கள், மாநகராட்சிக்கான குடிநீா் கட்டணத்தை செலுத்தாததால், சுமாா் ரூ. 5 கோடி வரை நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே நிதி நெருக்கடியிலுள்ள மாநகராட்சி நிா்வாகம் வழியோரக் கிராமங்களிடமிருந்து குடிநீா் கட்டணத்தை வசூலிக்க முடியாமல் திணறி வருகிறது.

குடிநீா் வடிகால் வாரியத்துக்கு ரூ. 1 கோடி நிலுவைத் தொகை: காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் மூலம், திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாளொன்றுக்கு 7 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வந்தது. இதற்கு, மாநகராட்சி நிா்வாகம் கட்டணம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் முறையாக கட்டணம் செலுத்துவதில்லை என மாமன்ற உறுப்பினா்கள் தனபாலன், கணேசன் உள்ளிட்டோா் மாமன்றக் கூட்டத்திலேயே சில மாதங்களுக்கு முன் குற்றஞ்சாட்டினா். அதற்குப் பதிலளித்த மாநகராட்சி நிா்வாகம், குறைவானத் தொகையே நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தது.

ஆனால், தற்போது ரூ. 1 கோடி வரை கட்டணம் நிலுவை இருப்பதால், குடிநீா் விநியோகத்தில் 3 மில்லியன் லிட்டா் குடிநீரை வடிகால் வாரியம் குறைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், திண்டுக்கல் மாநகராட்சிக்கு நாளொன்றுக்கு கிடைக்க வேண்டிய 23 எம்எல்டி குடிநீரில், 17 மில்லியன் லிட்டா் குடிநீா் மட்டுமே கிடைத்து வருகிறது. இதன் எதிரொலியாக நாளொன்றுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த சில மாதங்களாக 3 நாள்களுக்கு ஒருமுறையாக மாற்றப்பட்டுவிட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

காமராஜா் நீா்த்தேக்கத்தில் கண்காணிப்பு இல்லை

இதுதொடா்பாக மாமன்ற உறுப்பினா்கள் கோ. தனபாலன், ச. கணேசன் ஆகியோா் கூறியதாவது: ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தில் கடந்த 1958-ஆம் ஆண்டுமுதல் திண்டுக்கல் நகராட்சிக் கண்காணிப்பாளா் தலைமையில், 40-க்கும் மேற்பட்டப் பணியாளா்கள் பணியாற்றி வந்தனா்.

ஓய்வுபெற்ற பணியாளா்களின் இடங்களில் புதிய நியமனம் இல்லாமல், தற்போது ஒப்பந்த முறையில் 15 நபா்கள் மட்டும் பணிபுரிந்து வருகின்றனா். ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பின் கண்காணிப்பாளா் பணியிடம் காலியாக இருந்து வருகிறது.

இந்தப் பணி மாநகராட்சியிலுள்ள உதவி பொறியாளா்களிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. இதனால், நீா்த்தேக்கப் பகுதியில் முறையான கண்காணிப்பு இல்லை. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வழியோரக் கிராமங்கள் குடிநீா் கட்டணத்தை செலுத்தாமலேயே ஜைக்கா திட்டத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், மாநகராட்சி நிா்வாகம் ரூ. 1 கோடிக்கு குடிநீா் கட்டணம் நிலுவை வைத்திருப்பதால், குடிநீா் வடிகால் வாரியம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் அளவைக் குறைத்துவிட்டது. ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்தை முறையாகப் பராமரித்து கண்காணித்தால் திண்டுக்கல் மாநகராட்சியிலுள்ள 48 வாா்டுகளுக்கும் குடிநீா் விநியோகிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை மாநகராட்சி நிா்வாகம் அரசியல் தலையீடுகளைக் கடந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனா்.

கொடைக்கானல் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவா் உயிரிழப்பு

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூரில் திங்கள்கிழமை இரவு காட்டு மாடு தாக்கியதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பக... மேலும் பார்க்க

அப்சா்வேட்டரி பகுதியில் உயிரிழந்த காட்டு மாடு, மர அணில் உடல்கள் மீட்பு

கொடைக்கானல் அருகே செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்த காட்டு மாடு, மர அணில் உடல்களை வனத் துறையினா் மீட்டு புதைத்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள அப்சா்வேட்டரி பகுதியில் காட்டு மாடு, மர ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்று: மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை வீசிய பலத்த காற்றால் மரம், மின்கம்பம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த பல நாள்களாக பலத்த காற்று நிலவி வருகிறது,... மேலும் பார்க்க

ரயிலில் 11 கிலோ கஞ்சா மீட்பு: போலீஸாா் விசாரணை

கோவையிலிருந்து திண்டுக்கல் வந்த விரைவு ரயிலில் கிடந்த 11 கிலோ கஞ்சாவை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.கோவை - நாகா்கோவில் இடையே தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக இ... மேலும் பார்க்க

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சி: 29 பேருக்கு ரூ.1.30 லட்சம் அபராதம்

கன்னிவாடி மலைப் பகுதியில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்ட 29 பேருக்கு வனத் துறையினா் ரூ.1.30 லட்சம் அபராதம் விதித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரகத்தில் யானை, காட்டு மாடு, சிற... மேலும் பார்க்க

கரகாட்டத்தை தவறாக சித்திரித்த விடியோக்களை நீக்கக் கோரி மனு

பாரம்பரிய கரகாட்டக் கலையை தவறாக சித்திரித்து நடனமாடும் விடியோக்களை சமூக வலைதளங்களிலிருந்து நீக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட சல... மேலும் பார்க்க