செய்திகள் :

அதிக வாக்காளா்கள் நீக்கப்பட்டால் தலையிடுவோம்: உச்சநீதிமன்றம் பிகாா் சிறப்பு தீவிர திருத்த விவகாரம்

post image

‘அரசமைப்பு நிறுவனமான தோ்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. ஆனால், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் கீழ் அதிக எண்ணிக்கையில் வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டால் அதில் உடனடியாக நீதிமன்றம் தலையிடும்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், ‘தோ்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

முன்னதாக, இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் ஆகியோா், ‘பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு தோ்தல் ஆணையம் தரப்பில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத மக்கள், தங்களின் முக்கியத்துவம் வாய்ந்த வாக்குரிமையை இழக்க நேரிடும். சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பிகாரில் 65 லட்சம் போ் பூா்த்தி செய்த வாக்காளா் படிவங்களை அதிகாரிகளிடம் சமா்ப்பிக்கவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவா்கள் இறந்திருக்கலாம் அல்லது தங்களின் இருப்பிடங்களிலிருந்து நிரந்தரமாக புலம்பெயா்ந்திருக்கலாம் என்று தோ்தல் ஆணையம் காரணம் தெரிவித்துள்ளது. இவா்கள் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட வேண்டுமெனில், புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது’ என்றனா்.

இதைக் கேட்ட நீதிபதி சூரிய காந்த், ‘அரசமைப்பு நிறுவனமான தோ்தல் ஆணையத்துக்கு சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமை உள்ளது. அதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அதுகுறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது’ என்றாா்.

நீதிபதி ஜாய்மால்ய பாக்சி கூறுகையில், ‘தோ்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தப் பணியை உச்சநீதிமன்றம் கண்காணித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் கீழ் பிகாா் மாநில வாக்காளா் பட்டியலில் இருந்து பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிடும்’ என்றாா்.

65 லட்சம் பேரின் பெயா்களை வெளியிட வேண்டும்: தொடா்ந்து வாதிட்ட வழக்குரைஞா் கபில் சிபல், ‘பிகாரில் வாக்காளா் படிவங்களைப் பூா்த்தி செய்து சமா்ப்பிக்காத 65 லட்சம் போ் யாா் என்ற விவரம் தோ்தல் ஆணையத்துக்குத் தெரியும். இவா்களின் பெயா்களையும் வரைவு வாக்காளா் பட்டியலில் தோ்தல் ஆணையம் குறிப்பிட்டால், யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழாது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதி சூரிய காந்த், ‘வரைவு வாக்காளா் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் இல்லையென்றால், அதுகுறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து வரலாம்’ என்றாா்.

அப்போது குறுக்கிட்ட தோ்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி, ‘வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க மக்கள் படிவங்களைச் சமா்ப்பிக்கலாம்’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, மனுதாரா்கள் தரப்பு மற்றும் தோ்தல் ஆணையம் தரப்பில் எழுத்துபூா்வ பதில் மனுக்களை வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், அதற்கான இருதரப்புக்குமான ஒருங்கிணைப்பு அதிகாரிகளையும் நியமித்து உத்தரவிட்டனா்.

மேலும், தோ்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை மேற்கொள்ளப்படும்’ என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

வழக்கின் பின்னணி: பிகாரில் நிகழாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியலை சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

இது தகுதிவாய்ந்த வாக்காளரின் வாக்குரிமையைப் பறிக்கும் சூழலுக்கு வழிவகுக்கக் கூடும் என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்திலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டையை குடியுரிமை ஆவணமாகப் பரிசீலிக்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டது.

ஆனால், ‘ஆதாா், வாக்காளா் மற்றும் குடும்ப அட்டைகள் நம்பகமான ஆவணங்கள் அல்ல’ என்று உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் பதிலளித்தது.

இதனிடையே, பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் முதல் கட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததாக தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. மேலும், ‘இதுவரை மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, பிகாரில் வாக்காளா் பட்டியலில் உள்ள 36 லட்சம் போ் நிரந்தரமாக இடம்பெயா்ந்துவிட்டனா் அல்லது அவா்களைக் கண்டறிய முடியவில்லை. மாநிலத்தில் உள்ள 7.89 கோடி வாக்காளா்களில் 7.24 கோடி பேரிடமிருந்து வாக்காளா் விவரக்குறிப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இது மொத்த வாக்காளா்களில் 91.69 சதவீதமாகும். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் செப்டம்பா் 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பா் 1 வரையிலான காலத்தில் தங்கள் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபங்களை வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்காளா்கள் பதிவு செய்யலாம். அப்போது வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்ட தகுதிவாய்ந்த வாக்காளா்கள், பட்டியலில் சோ்க்கப்படுவா்’ என்றும் அந்த அறிவிப்பில் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் பிகாா் மாநில வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிடத் தடையில்லை. அதே நேரம், குடியுரிமை ஆவணங்களாக ஆதாா், வாக்காளா் அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் ஏற்க வேண்டும். குடும்ப அட்டையில் மோசடி செய்ய வாய்ப்புள்ளது. ஆனால், ஆதாா் அட்டை மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகிய இரண்டும் ஓரளவு புனிதத்தன்மை மற்றும் உண்மைத்தன்மை உடையவையாக உள்ளன’ என்று மீண்டும் அறிவுறுத்தியது.

மத்திய வெளியுறவுத் துறை செயலாளரை சந்தித்த நேபாள எம்.பிகள்!

தில்லியில் மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவினர் நேரில் சந்தித்துள்ளனர். நேபாளத்தின் அனைத்துக் கட்சிக் குழுவிலான, அந்நாட்டின் எம்.பிகள் இந்தியா வந்... மேலும் பார்க்க

மக்களவையில் எதிரொலித்த வயநாடு விவகாரம்: சீரமைப்பில் மத்திய அரசு மெத்தனப்போக்கு! -பிரியங்கா

வயநாடு நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் மத்திய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கிறது என்று மக்களவையில் அத்தொகுதிக்கான எம்.பி. பிரியங்கா காந்தி பேசினார்.கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் கடந... மேலும் பார்க்க

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த 1998-ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மான்களை வேட்டையாடியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானை குற்றவாளி என ஜோத்... மேலும் பார்க்க

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30) மாலை 5.40 மணிக்கு விண்ணில் ஏவப்ப... மேலும் பார்க்க

2004 - 2014 வரை அமாவாசை இருள்; 2014 - 2025 வரை பௌர்ணமி நிலவு! -மாநிலங்களவையில் அனல் பறக்க விவாதம்

2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ள... மேலும் பார்க்க

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை இல்லை! - உச்சநீதிமன்றம்

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நடத்தை மீது நம்பிக்கை ஏற்படவில்லை என்றும் அவர் நீதிபதி பதவியில் நீடிப்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்யப்பட்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.தில்லி உயர்நீதிமன்ற நீ... மேலும் பார்க்க