CWC: `அந்த நிகழ்ச்சியில் இதைதான் பகிர்ந்தேன்; மாற்றிப் பரப்புவது நியாயமற்றது'- ல...
சத்தீஸ்கா்: துப்பாக்கிச்சூட்டில் ஒரு நக்ஸல் கொலை- பாதுகாப்புப் படையினா் மூவா் காயம்
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸல்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒரு நக்ஸல் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கையின்போது, நக்ஸல்களின் கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா்.
இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சவான் கூறியதாவது:
சுக்மா - தந்தேவாடா மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ள வனப் பகுதியில் நக்ஸல் ஒழிப்பு நடவடிக்கையில் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகளை உள்ளடக்கிய கூட்டு படையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா்.
இந்த சண்டைக்குப் பிறகு, அந்தப் பகுதியில் தீவிர தேடுதலில் பாதுகாப்புப் படையினா் ஈடுபட்டபோது, குண்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் நக்ஸல் ஒருவரின் உடலை கண்டறிந்தனா். மேலும், அந்தப் பகுதியிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளையும் கைப்பற்றினா்.
அந்தப் பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டபோது, நக்ஸல்கள் பதுக்கி வைத்திருந்த கண்ணிவெடி வெடித்தது. இதில் பாதுகாப்புப் படையினா் மூவா் காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக உயா் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது. அபாய கட்டத்தை கடந்துவிட்டனா் என்றாா்.
சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் மட்டும் 226 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இதில், பிஜாபூா், பஸ்தா், கான்கோ், கொனாடாகான், நராயண்பூா், சுக்மா மற்றும் தந்தேவாடா பகுதிகளை உள்ளடக்கிய பஸ்தா் மண்டலத்தில் மட்டும் 208 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா்.