கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!
கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.
உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக நோய்க்கிருமிகளைக் கண்டறியும் பிரபல நிபுணர் ஷி ஸெங்லி கூறியுள்ளார்.
வுஹான் வைராலஜி நிறுவனம், குவாங்சோ ஆய்வகம்ம் குவாங்சோ அறிவியல் அகாதெமி இணைந்து நடத்திய ஆய்வில், கரோனா தீநுண்மியுடன் பல வகைகளில் ஒத்த எச்கேயு ஃபை (HKU5) தீநுண்மி கண்டறியப்பட்டது. இந்த தீநுண்மி மனிதர்களிடையே பரவுவதற்கான அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கோவிட்-19ஐ போல இந்த தீநுண்மி ஆபத்தானது அல்ல என்றாலும், தொற்றுநோய்க்கான தயார்நிலைக்காக இது கடந்தாண்டு உலக சுகாதார அமைப்பின் வளர்ந்து வரும் நோய்க்கிருமிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இதையும் படிக்க:சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!
எச்கேயு ஃபை தீநுண்மி மனிதர்களுக்குப் பரவக்கூடிய அபாயம் அதிகம் என்று ஆய்வில் கூறினர். நேரடியாகவோ மற்றொரு விலங்கின் மூலமாகவோ வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று கூறப்படுகிறது.
கரோனா தொற்றுக்குக் காரணமான கோவிட்-19ஐ விட எச்கேயு ஃபை தீநுண்மியின் செயல்திறன் குறைவு என்பதால், மனிதர்களிடையே இந்த தீநுண்மி பேரளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மிகைப்படுத்திக் கூறி, அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.