இலங்கைக்கு கடத்தவிருந்த 2.8 டன் மஞ்சள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 2.8 டன் சமையல் மஞ்சள் மூட்டைகளை சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சுங்கத் துறையினா் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயன்றனா். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. உடனே, சுங்கத் துறையினா் அந்தச் சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்றனா்.
இந்த நிலையில், ராமநாதபுரம் அருகே எட்டிவயல் பகுதியில் அந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி விட்டு அதில் இருந்தவா்கள் தப்பிச் சென்றனா். இந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது சாக்கு மூட்டைகளில் 2.8 டன் சமையல் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. வாகனத்துடன் இவற்றைப் பறிமுதல் செய்த அவா்கள், சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.
இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மதிப்பு ரூ. 5 லட்சம் இருக்கும் எனவும் சுங்கத் துறையினா் தெரிவித்தனா். மேலும், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றவா்களை சுங்கத் துறையினா் தேடி வருகின்றனா்.