கூகுள் பே மூலம் பணப் பரிமாற்றம் செய்தால்.. இனி கட்டணம்! புதிய நடைமுறை!
நாட்டில் பணப்புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை மத்திய அரசு ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட செயலிகள் பல. அவற்றில் கூகுள் பேவும் ஒன்று.
பொதுவாக டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்யக் கொண்டு வரப்பட்ட செயலிகளில் கூகுள் பேவுக்கு முதலிடம்தான்.
டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க செல்போன்களில் கூகுள் பே கொண்டுவரப்பட்டது. முதலில் சற்றுக் கடினமாக இருந்தாலும், கையில் எப்போதும் பணம் இருக்க வேண்டியதில்லை. எப்போதும் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற வசதியால் கூகுள் பே மெல்ல, மக்களை தனது வலைக்குள் சிக்க வைத்தது.
ஒரு டீ குடித்துவிட்டு வெறும் 15 ரூபாயைக் கூட கூகுள் பே மூலம் கொடுக்கும் அளவுக்கு மாறிவிட்டது உலகம். என்ன இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும்தான் கூகுள் பே வைத்து அதன் மூலம் பணம்பெறும் முறை நடைமுறைக்கு வரவில்லை. ஆனாலும் சில இடங்களில் அப்படியும் நடப்பது போன்ற விடியோக்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. உண்மையில் அப்படி நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த நிலையில், கூகுள் பே செயலி, தனது சேவையில் ஒரு சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்வதில், கூகுள் பே செயலி மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தனி நபர்களுக்கு இடையேயான பணப்பரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் கிடையாது. அது இலவசமாகவே தொடரும். ஆனால், அதே கூகுள் பேவில் ஒருவர் தனது டெபிட் அல்லது கிரெடிட் அட்டையைப் பயன்படுத்தி பில் பேமெண்டுகளை செய்யும் போது அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒருவர் டெபிட் அல்லது கிரெட் அட்டையிலிருந்து மின் கட்டணம், எரிவாயு சிலிண்டர் கட்டணம் முதலியவற்றை செலுத்தினால் அதற்கு செயல்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைக்கு, பரிமாற்றம் செய்யப்படும் தொகையிலிருந்து 1 முதல் 5 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாரணத்துக்கு ஒருவர் டெபிட் கார்டு மூலமாக ஏதேனும் ஒரு கட்டணத்தை ரூ.1000 அளவுக்கு செலுத்தினால் அதற்கு ரூ.10 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏற்கனவே, பல பணப்பரிமாற்ற செயலிகள் இந்த கட்டணங்களை வசூலித்து வரும் நிலையில், கூகுள் பேவும் தற்போது கட்டண வசூலிப்புக்குள் நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.