ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!
தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரலை! அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையானது தமிழகம் முழுவதும் 936 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையினை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களிலும், ஏனைய 24 மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும் 137 நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும் மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் என மொத்தம் 936 இடங்களில் நாளை (மார்ச் 14) காலை 9.30 மணி முதல் ஒளிபரப்பப்படுகிறது.
மேலும், 15.03.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் எல்.இ.டி. திரையின் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையம், முரசொலி மாறன் பூங்கா, அண்ணா நகா் கோபுர பூங்கா, கோயம்பேடு பேருந்து நிலையம், பாண்டி பஜாா் சாலை, வள்ளுவா் கோட்டம், கத்திப்பாரா பூங்கா, மெரீனா, பெசன்ட் நகா், திருவான்மியூா், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை, டைடல் பாா்க் சந்திப்பு உள்ளிட்ட 100 இடங்களில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகம் முழுவதும் 936 இடங்களில் பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டு இருப்பது, நிதிநிலை அறிக்கையில் முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையும் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே இருக்கும். எனவே, 16-ஆவது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும்.
இதனால் நிதிநிலை அறிக்கை மீதான எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கி இருக்கிறது.