உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எத்தனை சுற்றுலா வாகனங்களை இயக்க முடியும் என்பது குறித்த ஆய்வை சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்த முடிவு வருவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், உதகை மற்றும் கொடைக்கானலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நீதிபதிகள் கட்டுப்பாடு விதித்தனர்.
இதையும் படிக்க: தமிழுக்கு முக்கியத்துவம்! தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில் 'ரூ' குறியீடு!
அதன்படி, உதகைக்கு வார நாள்களில் 6,000 செல்லும் சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும். கொடைக்கானலுக்கு வாரநாள்களில் 4,000 சுற்றுலா வாகனங்கள், வார இறுதி நாள்களில் 6,000 சுற்றுலா வாகனங்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மின்சார வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அரசுப் பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள்) கொடைக்கானலுக்கு செல்லும் மலைப்பாதைகளின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்லத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.