பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 10 தீவிரவாதிகள் பலி!
கழுகார் : `ஆலையைத் திறக்க வேறொரு ரூட் ’ டு `குழப்பத்தில் பெண் தெய்வப் பிரமுகர்’
‘ஜில்’ மாவட்ட நுழைவு வாயிலின் மலைச்சரிவில், யானைகளின் முக்கிய வழித்தடம் மற்றும் வாழ்விடம் அமைந்திருக்கிறது. அதிலுள்ள மரங்களை, ‘முதிர்ந்த மரங்கள்’ என்ற பெயரில் வெட்டிக்கொள்வதற்கு கண்மூடித்தனமாக அனுமதி கொடுத்திருக்கிறதாம் மாவட்ட நிர்வாகம். வனத்துறையும் ‘நோ அப்ஜெக்ஷன்’ சான்று கொடுத்துவிட்டதால், பல்லாயிரக்கணக்கான டன் மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளம்பியிருக்கும் நிலையில், அந்தப் பகுதியில் வன விலங்குகளை கண்காணிக்கும் வகையில் பொறுத்தப்பட்ட அனைத்து சி.சி.டி.வி-களும் அணைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவாம். ‘அரசின் அனுமதி என்கிற பெயரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகின்றன. அதற்கான சாட்சியம் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான், சி.சி.டி.வி கேமராக்கள் ஆப் செய்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த மரக்கொள்ளையின் பின்னணியில் அரசுத்துறைகளும் ஆளுங்கட்சி புள்ளிகளும் கூட்டுச் சதி செய்திருக்கிறார்கள். கோர்ட் நடவடிக்கை பாய்ந்தால், அதற்குப் பதில் சொல்ல ஏதுவாக, மழுப்பல் அறிக்கைகளையும் தயார் செய்கிறார்கள்’ எனக் கொதிக்கிறார்கள் வன ஆர்வலர்கள்!
உப்பு மாவட்டத்தில் இயங்கிவந்த பெரும் ஆலை ஒன்று, மக்கள் போராட்டத்தினால் மூடப்பட்டது. மூடப்பட்ட ஆலையைத் திறப்பதற்காக, நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை ஆலை நிர்வாகம் தொடுத்தாலும், எல்லாம் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றன. அதனால், ஆலையைத் திறப்பதற்கு வேறொரு ரூட் எடுத்திருக்கிறதாம் ஆலை நிர்வாகம்.
“அந்த ஆலையிலிருந்துதான் காப்பர் பெரியளவில் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது, ஆலை மூடப்பட்டதால், வெளிநாட்டிலிருந்து அதிகமாக இறக்குமதி செய்ய வேண்டியதாகவுள்ளது. எனவே, ‘காப்பர் இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும்’ எனக் குரல்களை ஓங்கி ஒலிக்கவைக்க வேலைகள் நடக்கின்றன. அதோடு, ஆலை எதிர்ப்பாளர்களை ஆதரவாளர்களாக வளைக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. அதேபோல, டெல்லி புள்ளிகளையும் மாநிலப் புள்ளிகளையும் சரிக்கட்டவும் முயற்சிகள் நடக்கின்றன” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
கதைசொல்லித் தலைவரின் கட்சியிலிருந்து விலகிய ‘உக்கிரப் பெண் தெய்வப் பெயர்கொண்ட’ பிரமுகர், எங்கு கரைசேர்வது எனத் தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறாராம். சூரியக்கட்சி தொடர்புடையவர்களின் மேடையில் ஏறியவர், தற்போது முன்னாள் இலைக்கட்சி நிர்வாகியின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியிலும் மேடை ஏறியிருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு ‘ஸ்பான்சர்’ செய்ததே, ‘நடிகர்’ கட்சியின் நிர்வாகிதான். அந்த நிகழ்ச்சியிலும், ‘நடிகர்’ கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் திரளாகக் கலந்துகொண்டனர். இதையெல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துப் பார்க்கிறவர்கள், ‘விரைவிலேயே நடிகர் கட்சியில் அவர் இணையப்போகிறார்’ என டெல்டாவில் பரபப்பு கிளப்புகிறார்கள்.
அதேசமயம், ‘நாகைக்கு வரவிருக்கும் சின்னவர் முன்னிலையில், அவர் சூரியக் கட்சியில்தான் இணையப்போகிறார்’ என்கிற தகவலும் ஒரு பக்கம் அலையடிக்கிறது. இரண்டு கட்சிகளில், எந்தப் பக்கம் நகரலாம் எனப் புரியாமல் ரொம்பவே குழம்பிப்போயிருக்கிறாராம் ‘உக்கிரப் பெண் தெய்வப் பெயர்கொண்ட’ பிரமுகர்!
தூங்கா நகரத்தைச் சுற்றி கனிமவளக் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்கள்மீது, ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படியொரு முக்கியமான கனிமவளக் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ‘கிங்’ புள்ளி, பாரம்பர்யமான விழா ஒன்றைத் தனது சொந்த ஊரில் நடத்தினார். அந்த விழாவில் லோக்கல் மாண்புமிகு கலந்துகொண்டதுதான் பெரும் சர்ச்சையாகிருக்கிறது.
‘அவராவது அரசியல்வாதி. ஓட்டுக்காக விழாவில் கலந்துகொண்டார் என வைத்துக்கொள்ளலாம். ஆனால், மாவட்டத்தின் உச்ச அதிகாரியும் விழாவில் பங்கேற்றதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்..? அந்த ‘கிங்’ புள்ளிமீது இனி எப்படி சரியான விசாரணை நடைபெறும்..? இது வழக்கை பாதிக்காதா..?’ எனக் கேள்வி மேல் கேள்வி எழுப்புகிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்!
அருவி மாவட்ட ‘குயின்’ பிரமுகர் மீதான புகார்கள், சூரியக் கட்சியின் தலைமையை நோக்கி வரிசைக்கட்டியிருக்கின்றன. ‘மாவட்டத்திலுள்ள சில பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகளுக்கு, ‘கவனிப்பு’ எதிர்பார்த்திருக்கிறார் குயின் பிரமுகரின் உறவினர் ஒருவர். அந்தப் பணிகளை எடுத்திருந்த லோக்கல் கட்சிக்காரர்கள், கவனிப்புக்கு மறுத்திருக்கிறார்கள். கடுப்பான குயின் தரப்பு, ‘சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளில் முறைகேடு நடப்பதாக’ ஒரு மொட்டைப் புகாரை மாவட்ட அதிகாரிக்குத் தட்டிவிட்டிருக்கிறார்கள்.
இதனால் டென்ஷனான லோக்கல் கட்சிக்காரர்கள், ‘கவனிக்கவில்லை என்பதற்காகச் சொந்தக் கட்சிக்காரர்கள்மீதே புகாரளிப்பதா... அவரை ஜெயிக்க வைத்ததற்கு எங்களுக்குத் தண்டனையா..?’ எனத் தலைமைக்கு ஓலை அனுப்பியிருக்கிறார்கள். “விவரமறிந்த கட்சித் தலைமை, குயின் பிரமுகர் தரப்பைக் கூப்பிட்டு வறுத்தெடுத்துவிட்டதாம். முன்புபோல, மேலிட வாரிசுப் பிரமுகரின் ஆசியும் தற்போது இல்லை என்பதால், அதிர்ந்துபோயிருக்கிறாராம் குயின் பிரமுகர்” என்கிறார்கள் அருவி மாவட்ட உடன்பிறப்புகள்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
