ரஷிய ராணுவத்துக்கு வெடிகுண்டு பார்சல்களை அனுப்பிய நபர் கைது!
Coolie Exclusive: "ரஜினி சார் பிறந்தநாள் அன்னைக்கு படத்துல அவர்கூட நடிச்சது..." - மோனிஷா ஷேரிங்ஸ்
`மாவீரன்' படத்தின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர் மோனிஷா பிளசி. `டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியிலும் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்போது வெளியாகி இருக்கும் `சுழல் 2' வெப் சீரிஸில் தனது எதார்த்தமான நடிப்பினால் அசர வைத்திருந்தார். அவரை நம் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம்.
" `முப்பி' கேரக்டர் என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான கேரக்டர். சீரிஸ் பார்த்துட்டு நிறைய பேர் பாராட்டுறாங்க. வீட்ல இருந்து நமக்குப் பாராட்டு கிடைக்கிறதுதான் கஷ்டம். ஆனா, அம்மா நல்லா பண்ணியிருந்தன்னு சொன்னது சந்தோஷமா இருந்தது. இந்தக் கேரக்டருக்காக என்கிட்ட பேசும் போது சண்டைக்காட்சிகள் எல்லாம் இருக்குன்னு சொன்னாங்க. நம்மளை நம்பி இப்படியொரு சீன் கொடுக்கிறாங்க... இதுக்கு அப்புறம் இது மாதிரி கிடைக்குமான்னு தெரியாது அதனால இறங்கி பண்ணிடனும்னு நினைச்சேன். எனக்கு கேரக்டர் ரோல் பண்ணனும்ங்கிறதுதான் ஆசை. முப்பி நான் நினைச்சதுக்கு மேலான ஒரு கேரக்டர். சண்டைக்காட்சிக்கு ரிகர்சல் பார்த்தோம். அப்ப மாஸ்டர் என்னை சோட்டா பீம்னு தான் கூப்டுவார். ஏன் அப்படி கூப்டுறீங்கன்னு கேட்டா உங்க எனர்ஜி, கான்ஃபிடன்ட்டிற்காகத்தான் அப்படி கூப்டுறேன்னு சொல்வார். அந்த ரிகர்சல் தான் சண்டைக்காட்சி எடுக்கும்போது உதவியா இருந்தது. முப்பி நிறைய விஷயங்களை எனக்குக் கத்துக் கொடுத்திருக்கு!" என்றவரிடம் ஜனநாயகன் குறித்துக் கேட்டோம்.
"ஜனநாயகன் பூஜைக்கு என்னைக் கூப்பிட்டதையே என்னால நம்ப முடியல. ஏன்னா பெரிய டீம் அதுல நம்மள ஞாபகம் வச்சுக் கூப்பிடுறாங்கன்னு இருந்தது. அந்த பூஜையில் வேற ஒரு உலகத்துல இருக்கிற மாதிரிதான் இருந்தேன். மமிதா ஃபோட்டோ எடுத்ததும் விஜய் சார்கிட்ட நான் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாமான்னு கேட்கவும், வாங்கன்னு சொல்லிக் கூப்பிட்டார். அவர் பக்கத்துல எந்த ரியாக்ஷனுமே இல்லாம தான் நின்னேன். அந்தத் தருணம் கனவைவிடப் பெருசு. விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்ல ரொம்ப அமைதியா இருப்பாங்க. அவரோட படத்துல நானும் ஒரு பார்ட் ஆக இருக்கேங்கிறதெல்லாம் பிளசிங் தான்" என்றவர் தொடர்ந்து பேசினார்.
" `மாவீரன்' திரைப்படம் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. அது மூலமாகத்தான் சுழல் கிடைச்சது. இதுவரைக்கும் பெருசா நான் யார்கிட்டேயும் சொல்லல... இப்ப சொல்றேன்... `கூலி' படத்தில் நடிக்கிறேன். லோகேஷ் அண்ணாவும் `மாவீரன்' பார்த்துட்டுதான் என்னை செலக்ட் பண்ணியிருக்கார். லாஸ்ட் மினிட்ல தான் நான் நடிக்கிறேங்கிறது முடிவாச்சு. அஷ்வின் அண்ணா, சிவா அண்ணா, சரிதா மேமுக்கு எப்பவும் என்னோட அடுத்தடுத்த விஷயங்கள் குறித்துச் சொல்லி பிளசிங் வாங்குவேன். எனக்கு ரஜினி சாரோட ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்திடணும்னு இருந்தது. லோகேஷ் அண்ணாகிட்ட கேட்டுட்டே இருந்தேன். கரெக்டா சாருடைய பிறந்தநாள் அன்னைக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. அவரோட பிறந்தநாள் அன்னைக்கு அவர் கூட ஒர்க் பண்ற வாய்ப்பும் கிடைச்சது. அதெல்லாம் எவ்ளோ பெரிய பிளசிங். சிவா அண்ணா ஜனநாயகனுக்கும் சரி, கூலிக்கும் சரி என்னை விஷ் பண்ணினார்.
ஒண்ணு பண்ணிட்டா எல்லாமே சுலபம்னு நினைச்சேன். ஆனா, அப்படியில்ல. எல்லாத்துக்கும் வெயிட்டிங் பீரியட்னு ஒண்ணு இருக்கு. அதுதான் கொஞ்சம் கஷ்டம். அடுத்துக்கட்டமா என்னப் பண்ணப் போறோம்னு சுழல் முடிச்சிட்டு வெயிட் பண்ணிட்டிருந்தப்ப தான் கூலி, ஜனநாயகன் கிடைச்சது. அது கிடைச்சப்ப நமக்கா நல்லது நடக்குதுன்னு இருந்தது. நான் எப்பவுமே கிடைச்ச எந்த வாய்ப்பாக இருந்தாலும் நம்மளால முடிஞ்சதை பண்ணிடனும்னு நினைப்பேன். அப்படித்தான் இப்பவும் பண்ணிட்டும் இருக்கேன், இனியும் பண்ணுவேன்!" என்றார்.
படங்கள் - விக்னேஷ்
இன்னும் பல விஷயங்கள் குறித்து மோனிஷா பிளசி பகிர்ந்து கொண்டார். அவற்றைக் காண லிங்கை கிளிக் செய்யவும்!