மகாராஷ்டிரம் 2047-க்குள் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்கும்: அஜித் பவார்
பெண் வேஷம் போட்டது நிஜம்தான்; ஆனா, அந்த வீடியோ...`பகீர்' குற்றச்சாட்டு குறித்து விக்ரமன் சொல்வதென்ன?
'அபார்ட்மென்ட்டில் பெண் வேடமிட்டு இரவு நேரங்களில் சிலருக்கு பாலியல் தொந்தரவு தந்தார்' என பிக் பாஸ் விகரமன் குறித்து சேனல்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேற்றைய தினம் வீடியோ ஃபுட்டேஜ் ஒன்று வெளியானது குறித்து விகரமனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
''ப்ரெஸ்டிஜ் வில்லாங்கிற அந்த அபார்ட்மென்ட்ல எனக்குச் சொந்தமா ஃபிளாட்டே கிடையாது. என் மனைவி ப்ரீத்தி சில வருஷங்களுக்கு முன்னாடி அங்க வாடகைக்கு இருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் திருமணம் செய்துக்கிட முடிவானதாலயும் அவங்களும் நானும் சினிமாத் துறையில் இருந்ததாலும் ஒர்க் தொடர்பா அவங்களைப் பார்க்க அந்த வீட்டுக்கு சில தடவை போயிட்டு வந்திருக்கேன்.

அப்படிப் போன ஒரு தடவை நான் இப்ப நடிச்சிட்டிருக்கிற ஒரு படத்துல ஒரு பாட்டுல சின்னதா வர்ற ஒரு சீனுக்கான டெஸ்ட் ஷூட் பண்ணிப் பார்த்தோம். நான் பெண் வேடமிட்டு சிலரை வம்புக்கு இழுக்கிற மாதிரியான ஒரு காட்சி. சில நிமிடக் காட்சிதான். அதனால சினிமா மாதிரி யாரும் கேமரா எடுக்கக் கூடாதுங்கிற மாதிரியான கன்டிஷன்லாம் போடல. அதனால வேடிக்கை பார்க்க வந்த சிலர் அப்ப வீடியோ எடுத்ததெல்லாம் நடந்தது.
தவிர அந்த ஷூட்டிங்கின்போது சின்னதா ஒரு பிரச்னையும் அங்க வந்துடுச்சு. அதனால அந்த ஷூட்டிங்கையுமே கொஞ்ச நேரத்துல முடிச்சுட்டோம். இது நடந்து பல மாசங்கள் ஆச்சு. என் மனைவியுமே எங்க திருமணத்துக்குப் பிறகு அந்த வீட்டையே காலி பண்ணிட்டாங்க.
இப்ப திடீர்னு நேத்து செய்திச் சேனல்கள்ல அந்தக் காட்சிகளுடன் பாலியல் குற்றச்சாட்டுனெல்லாம் சொல்லி நியூஸ் வெளியானது எனக்கே சேனல் பார்த்துதான் தெரிஞ்சது.

நானும் மீடியாவுல இருந்தவன்தான். என்னதான் ஸ்டிங் ஆபரேஷன்னாலும் ஒரு வார்த்தை சம்பந்தப்பட்டவங்கக்கிட்ட கேட்டுப் பிறகு செய்தியை ஒளிபரப்பலாம். நேத்து அப்படியொரு செய்தி வெளியானதுல இருந்து என் வீட்டார் என் மனைவி வீட்டார், தவிர எங்க நண்பர்கள்னு எல்லாரும் பெரிய மன உளைச்சல்ல இருக்காங்க. ஒருத்தர் பத்தி அபாண்டமான குற்றச்சாட்டை உலகத்துக்குச் சொல்றதுக்கு முன்னாடி அதன் உண்மைத்தன்மையை மீடியா செக் பண்ணிக்க வேண்டாமாங்கிறதுதான் என்னுடைய ஆதங்கம்.
அந்த அபார்ட்மென்ட்ல வசிக்கிற இயக்குநர் ராஜு முருகன் மனைவி அபார்ட்மென்டின் அசோசியேஷன் நிர்வாகிகள் மேல கொடுத்த ஒரு புகாரை வச்சுகிட்டு, அந்தப் புகார் கூட என் வீடியோவை கோத்துவிட்டு செய்தி வெளியிட்டிருக்காங்க.
குறிப்பிட்ட ஒரு செய்திச் சேனல்ல நான் தொடர்பு கொண்டு பேசினதும் செய்தியை வீடியோவை பிரைவேட் பண்ணிட்டாங்க. இருந்தாலும் சமூக வலைதளங்கள்ல இந்த தகவல் வேகமா பரவியதுல பலரும் என்னைத் தொடர்புகொண்டு இது தொடர்பா விசாரிச்சிட்டிருக்காங்க. இன்னொரு கொடுமை என்னன்னா என்னைப் பிடிக்காதவங்க இந்த வீடியோவைத் தப்பா சரியான்னு தெரிஞ்சுக்க விரும்பாமலே பரப்பி விட்டிட்டு இருக்காங்க.
இந்த வைரல் யுகத்துல இந்த மாதிரியான தப்பான செய்திகள்தான் வேகமா பரவுது. அது நிஜமில்லைன்னு நாங்க புரிய வைக்கிற ஒரு தேவையில்லாத அழுத்தம் எனக்கும் என் மனைவிக்கும்.
இதனால் காவல் துறையிலயும் புகார் தந்திருக்கேன். தவிர என் வீடியோ கூட தொடர்பு படுத்தி தகவல் வெளியான ராஜு முருகன் மனைவியை இதுவரை நான் பார்த்தது, பேசினது கூட கிடையாது.

இந்த சம்பவம் நிகழ்ந்த பிறகு நான் ராஜு முருகன் கிட்ட பேசினேன். 'நாங்க அசோசியேஷன் நிர்வாகிகள் மீதுதான் புகார் தந்தோம், உங்க பெயரைக் குறிப்பிடவே இல்லை'ன்னு சொல்றார். வீடியோ எப்படி வெளியாச்சுன்னு போலீஸ்தான் கண்டு பிடிக்கணும்.
என்னைப் பொறுத்தவரை எம்பாட்டுக்கு சினிமா பக்கம் கவனம் செலுத்திட்டு இருக்கேன். வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிற ஒரு படத்துல இபபோ நடிச்சிட்டிருக்கேன். ஆனா என் மீது ஏன் சிலர் இப்படி வன்மத்துடன் இருக்காங்கன்னு தெரியலை'' என்கிறார்.