'ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருங்கள்' - பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு!
ஹோலி பண்டிகையன்று முஸ்லீம்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று பிகார் பாஜக எம்எல்ஏ ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம் மதுபானி மாவட்டம் பிஸ்ஃபி தொகுதி எம்எல்ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சௌல் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களுடன் பேசும்போது, ரமலான் மாதத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால் இந்துக்களுடன் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்க முஸ்லீம்கள் அன்று வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"முஸ்லீம் மக்களிடம் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். நீங்கள் நமாஸ் செய்வதற்கு ஒரு ஆண்டுக்கு 52 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன. ஆனால் ஹோலி இதில் ஒரே ஒரு வெள்ளிக்கிழமைதான் வருகிறது. எனவே இந்துக்கள் தங்கள் பண்டிகையைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும். முஸ்லீம்கள் மீது வண்ணங்கள் பூசப்பட்டால் கோபப்படக் கூடாது. அவர்களுக்கு இது பிரச்னையாக இருந்தால், அன்றைய தினம் வீட்டிற்குள்ளேயே இருந்துகொள்ள வேண்டும். சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | திமுக எம்.பி.க்கள் பற்றி தவறான கருத்து: திரும்பப் பெற்றார் பிரதான்!
மேலும், ஹோலி பண்டிகைக்காக முஸ்லீம்கள்தான் வண்ணப்பொடிகளை விற்பனை செய்வதாகவும் ஆனால் அந்த வண்ணப்பொடி தங்கள் துணிகளில் பட்டால் நரகத்திற்குச் செல்வதுபோல் அவர்கள் உணர்வதாகவும் கூறியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா கட்சி எம்எல்ஏ இஸ்ராயில் மன்சூரி, பாஜக எம்எல்ஏவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் ஹோலி அன்று முஸ்லீம்கள் பற்றி பாஜக எம்எல்ஏவுக்கு என்ன கவலை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இங்கு இந்து - முஸ்லீம்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.