தலைமை நிர்வாக அதிகாரி பதவி நீட்டிப்புக்குப் பிறகு இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள்...
``மூன்றாவது குழந்தை... பெண் என்றால் ரூ.50,000; ஆண் என்றால் பசு" - ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் இந்தியளவில் குறிப்பாக தென்னிந்தியாவை அச்சுறுத்தியிருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்திய தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து, வட மாநிலங்களில் மக்கள்தொகை அதிகரித்திருப்பதே அதற்கு காரணம். அதனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தொடர்ந்து மக்களை அதிகம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி வருக்கின்றனர்.

இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, அதிக குழந்தைகளைப் பெற குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடு, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுத்த பெண்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விஜயநகரத்தில் உள்ள ராஜீவ் விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடு கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அவர், ``தென்னிந்தியாவில் குறைந்து வரும் மக்கள்தொகை குறித்து முதலமைச்சர் கவலை தெரிவித்தார். இங்கு வயதான மக்கள்தொகை சவால்களை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை விட நீண்டகால மக்கள்தொகை மேலாண்மை அவசியம். நான் குடும்பக் கட்டுப்பாட்டை ஆதரித்து வந்தேன். இப்போது நான் எனது கருத்துகளை மாற்றி மக்கள்தொகையை ஊக்குவிக்கிறேன்.
எதிர்காலத்திற்கான மக்கள்தொகையை நாம் நிர்வகிக்க முடிந்தால், இந்தியாவும் இந்தியர்களும் சிறப்பாக இருப்பார்கள். உலகளாவிய சமூகங்கள் உலகளாவிய சேவைகளுக்காக இந்தியர்களான நம்மைச் சார்ந்துள்ளன. எனவே ஒரு பெண் மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தையைப் பெற்றால் அவருக்கு ஒரு பசுவும், கன்றும், பெண் குழந்தையைப் பெற்றால் ரூ.50,000-மும் வழங்கப்படும். இதை மக்களவை உறுப்பினரான என் சம்பளத்திலிருந்து ரொக்க ஊக்கத்தொகையாக வழங்குவேன்." என்றார்.
அவரின் இந்த அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதே தினம், சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது, ``எத்தனையாவது குழந்தையாக இருந்தாலும் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பிறப்பு நேரத்தில் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். முன்னர், மகப்பேறு விடுப்பு இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இருந்தது. இப்போது, எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல் அனைத்து குழந்தை பிறப்புகளுக்கும் மகப்பேறு விடுப்பை விரிவுபடுத்துகிறோம்.
இந்த நடவடிக்கை குடும்ப வளர்ச்சியை ஊக்குவித்தல், மக்கள்தொகை சமநிலை செய்தல், பெண்கள் தங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஆந்திரப் பிரதேசத்திற்கு வலுவான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்" என்றார்.