Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?
இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவருக்கு வாழ்நாள் தடை விதித்து இருக்கிறது. சமீபத்தில் புதிதாக தனது தோழியை காதலிப்பதாக லலித் மோடி சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். லலித் மோடி தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடு என்ற சிறிய நாட்டில் குடியுரிமை பெற்று இருந்தார். இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்க நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து புதிய வனுவாடு நாட்டில் குடியுரிமை பெற்று பாஸ்போர்ட்டும் பெற்றுள்ளார். புதிய நாட்டில் குடியுரிமை கிடைத்ததைத் தொடர்ந்து லலித் மோடி தனது இந்திய பாஸ்போர்ட்டை இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தில் கொடுத்து சரண்டர் செய்துள்ளார்.

இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்திருந்தது. அதோடு லலித் மோடி வனுவாடு நாட்டில் குடியுரிமை பெற்று இருப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதில் புதிய திருப்பமாக லலித் மோடிக்கு கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வனுவாடு நாட்டு பிரதமர் ஜோதம் உத்தரவிட்டு இருக்கிறார். இது குறித்து ஜோதம் அளித்த பேட்டியில், ''லலித் மோடியின் கிரிமினல் பின்னணி, இண்டர்போல் ஒப்புதல் போன்றவற்றைப் பார்த்துதான் குடியுரிமை வழங்கினோம். ஆனால் லலித் மோடிக்கு எதிராக இந்திய அரசு கொடுத்த மனுவை இண்டர்போல் இரண்டு முறை நிராகரித்து இருப்பதை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
சரியான ஆதாரம் இல்லை என்று கூறி இண்டர்போல் இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து இருக்கிறது. இண்டர்போல் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று லலித் மோடிக்கு எதிராக எச்சரிக்கை நோட்டீஸ் விட்டிருந்தால், அவரது பாஸ்போர்ட் தானாகவே ரத்து செய்யப்பட்டு இருக்கும். நாடு கடத்துவதில் இருந்து தப்பிக்கும் காரணத்திற்காக எங்களது நாட்டில் பாஸ்போர்ட் பெற முடியாது'' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்திய பாஸ்போர்ட்டை சரண்டர் செய்துள்ள லலித் மோடி வனுவாடு நாட்டில் பெற்ற பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாடு இல்லாத நபராக கருதப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு லலித் மோடி இந்தியாவில் இருந்து வெளியேறினார்.