`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ
இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதமராகவும், லிபரல் கட்சியின் தலைவராகவும் இங்கிலாந்து & கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி (Mark Carney) இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று லிபரல் கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் ஜஸ்டின் ட்ரூட்டோவுக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
அந்த விழாவில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றிய ஜஸ்டின் ட்ரூடோ, ``கனடா அமெரிக்காவிடமிருந்து ஒரு சவாலை எதிர்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக, சவால்கள், நெருக்கடிகள் எனத் தொடர்ந்து கனடியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் ஒவ்வொரு நெருக்கடியிலும், கனடியர்கள் தாங்கள் யார் என்பதைக் காட்டியுள்ளனர். நாம் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் ஆதரவாக நின்றுள்ளோம். ஒவ்வொரு முறையும், நாம் இன்னும் வலுவாக வெளிப்பட்டுள்ளோம்.
இப்போது, நமது அண்டை நாட்டின் சவாலை, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும்போதும், நாம் யார் என்பதை பெருமையுடன் அடையாளம் காட்டுகிறோம். நாம் நாடு எப்போதும் ஒரு பெண்ணின் தேர்ந்தெடுக்கும் உரிமையை பாதுகாத்து வரும் நாடு. முடிந்தவரை ராஜதந்திரமாக செயல்படுவோம். போராட்டம்தான் முடிவு என்றால் அதற்கும் தயாராகுவோம்.
இந்த அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும், நான் கனடியர்களை முதன்மையாகக் கருதினேன். எனக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது என்பதை அதன்மூலம் உறுதிசெய்துள்ளேன். இந்த அரசின் கடைசி நாள்களில்கூட, கனடியர்களை ஏமாற்றவில்லை. அவர்களுக்கான எதிர்காலத்தை வடிவமைப்பேன் என்பதை நிரூபித்திருக்கிறேன்" என்றார். இந்த உரை நிகழ்த்த அழைத்ததிலிருந்து உரை முடிக்கும் வரை பலமுறை உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.