நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிஎஸ்என்எல் கோபுரங்களை அதிகரிக்க வேண்டும்: சி...
Manus : மேனஸ் - ஏ.ஐ உலகின் `ஏகலைவன்!'
செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டுபிடிப்புகளும் அவற்றின் பயன்பாடும் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக சமீபத்தில் களமிறங்கியிருக்கிறது "மேனஸ்" என்கிற ஏ. ஐ பொது முகவர் (General AI Agent). ஓர் அலுவலகத்திலோ அரசு நிறுவனத்திலோ ஒரு செயல் நடக்க வேண்டுமென்றால், உதவ எப்படி முகவர்கள் இருப்பார்களோ, அதைப்போல ஒரு வேலையை ஒப்படைத்தால் ஆரம்பம் முதல் கடைசி வரை செய்ய வேண்டிய எல்லா செயல்களையும் தானாகக் கண்டறிந்து, கனகச்சிதமாக முடிக்கும் ஆற்றல் கொண்டதுதான் இந்த மேனஸ் என்கிற "ஏகலைவன் ஏஜெண்ட்"
2022ல் வெளிவந்த சேட்ஜிபிடி (Chat GPT), ஏ.ஐ உலகைப் புரட்டிப் போட்டது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால். அது வெறும் "மாணிக்" தான், நான் தான் "பாட்ஷா" என்கிறது மேனஸ். இது உண்மைதானா? பார்க்கலாம் வாங்க.

ஓப்பன் ஏ.ஐ (Open AI) - மேனஸ் (Manus)
ஓப்பன் ஏ.ஐ இன் சேட்ஜி.பி.டி, மனித மூளையால் மட்டுமே முடியும் என்று நாம் எல்லோரும் நினைத்த பல செயல்களை செய்து அசத்தியது - தொடர்களைப் படித்து "புரிந்து" கொள்ளுதல், புரிந்த கருத்துக்களை சுருக்கி எழுதுதல், புதிய கருத்துக்களை உருவாக்கும் படைப்பாற்றல் (Creativity), தர்க்க சிந்தனை (Logical thinking), திட்டமிடுதல், புதிய யோசனைகள் வழங்குதல் (Ideation) என அனைத்தும் எனக்குள் அடக்கம் என்று திருவிளையாடல் சிவாஜிபோல நம்மைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தது.

ஆனால் மேனஸ், இந்த சிவனையும் அடக்கும் சக்தியாக ஒரு படி மேலே போய், நான் சொல்ல மாட்டேன், செய்து காட்டுவேன் என்று ஒரு தானியங்கி செயலியாக (automated application) செயற்கை நுண்ணறிவியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்த்திருக்கிறது
என்னதான் செய்யும் இந்த மேனஸ்?
இப்போதைக்கு "அழைப்பு மூலம் மட்டுமே" (invitation only) மேனஸை உபயோகிக்க முடியும். அதனால், இதன் முழுத்திறமை பற்றித் தெரிந்து கொள்ள சில காலம் இருக்கிறது. ஆனால், இதை உருவாக்கிய நிறுவனம் வெளியிட்டுள்ள "ட்ரெய்லரே" பயங்கரமாக உள்ளது. வேலைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அத்தனை விண்ணப்பபடிவங்களையும் தானாகப் படித்து, தகுதி மற்றும் திறமை வாரியாக வரிசைப்படுத்தி, நிறுவனத்தின் தேவைக்கேற்ப வடிகட்டி, அறிக்கை வடிவமாக, மனித வள அதிகாரிக்கு இ-மெயில் அனுப்புகிறது இந்த மேனஸ். அதுவும் எந்த விதமான மனித ஈடுபாடும் இல்லாமல். இன்னொரு உதாரணம் வேண்டுமா? வீடு வாங்க விரும்பும் ஒருவருக்கு குறிப்பிட்ட ஊரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் இணையத்திலிருந்து பதிவிறக்கி, வீடுகள், நிலங்கள் பற்றிய விவரங்களை படங்களுடன் தொகுத்து, தானே ஒரு வலைதளத்தையும் (website) உருவாக்கி, அதன் லிங்கை (link) அளிக்கிறது. ஊர்கூடி இழுக்கும் தேர் இப்போது ஒரு நொடியில் நம் விரல் நுனியில்.

பல்வேறு துறைகளில் மேனஸின் தாக்கம்
மனிதனின் தொடர் கண்காணிப்பு இல்லாமல் பணிகளைத் தானே செய்து முடிக்கும் திறன் எல்லாத் துறைகளிலும் அவசியம் தானே? அதிலும் குறிப்பாக பெரிய நிறுவனங்களில் நிதித்துறை, விற்பனைத்துறை (sales), மனித வளத்துறை, மற்றும் வாடிக்கையாளர் சேவைத் துறைகளில் (customer service) இந்த ஏ.ஐ பொது முகவர் (General AI Agent) பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
அப்படியென்றால் இப்போது அந்த வேலைகளைச் செய்து கொண்டிருப்போரின் வேலைவாய்ப்பு? நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பது போல இந்தத் தொழில்நுட்பமும் சில பாதகங்களைக் கொண்டுவரும் என்பதுதான் ஏ.ஐ நிபுணர்களின் கருத்து.
மேனஸ் சந்திக்கவிருக்கும் சவால்கள்
சமீபத்தில் வெளியான டீப்சீக் (Deepseek) மற்றும் இப்போது வெளியாகியிருக்கும் மேனஸும், ஒருபக்கம், ஏ.ஐயில் சீனாவின் ஆதிக்கத்தை உலகத்துக்குக் காட்டினாலும், உலகம் என்னவோ பாபநாசம் சுயம்புலிங்கத்தை போலீஸ் பார்ப்பதைப் போல எப்போதும் ஒரு சந்தேகத்தோடே பார்க்கிறது. இன்னும் பொது மக்களின் உபயோகத்துக்கு முழுதாக வராத மேனஸ், அதன் தாய் நிறுவனத்தின் சுயவிளம்பரத்துக்குத் தகுதியானது தானா என்பதை உலகம் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும், அதுமட்டுமல்ல, பொதுவாகவே இணையப் பாதுகாப்பு (cyber security) தொடர்பான பல சந்தேகங்களும் விமர்சனங்களும் சீனாவிலும் சீன நிறுவனங்கள் மேலும் இருப்பதால் உலகத்தின் முழு நம்பிக்கையைப் பெற மேனஸ் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் .
எது எப்படியிருந்தாலும் மேனஸ், செயற்கை நுண்ணறிவுத்துறையின் வளர்ச்சியில் ஒரு பெரிய மைல்கல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏ.ஐ.யின் இந்த அபரிமிதமான வளர்ச்சியை நாம் கூர்ந்து கவனிப்பது மட்டுமன்றி அந்தத் துறை பற்றிய அறிவைத் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்வது, அதன் பயன்பாடுகளால் நம் வாழ்க்கையை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று சிந்திப்பதும் மிக அவசியமாகிறது