இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்துக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிந்து ம...
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ஜம்மு-காஷ்மீரில் பதற்றம் அதிகரிப்பு
ஜம்மு நகரம் மற்றும் பிற பகுதிகளில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் நடத்திய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதல் தோல்வியை அடுத்து தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சைரன்கள் சப்தங்களைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3.50 மணி 4.45 மணி வரை கேட்ட வெடி சப்தங்களால், வானில் காணப்பட்ட வெடிமருந்துகளின் புகை மூட்டத்தால், ஜம்மு நகரின் சில பகுதிகளில் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக பாதுகாப்புப் படையினர் அளித்த விளக்கத்தை அடுத்து இயல்புநிலை காணப்பட்டது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியதாவது: ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் பிற பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை வியாழக்கிழமை இரவு நடத்தியது. இதையடுத்து பாகிஸ்தானின் அனைத்து ஆளில்லாத ட்ரோன் மற்றும் ஏவுகணைகளையும் இந்தியாவின் ‘ஒருங்கிணைந்த ஆளில்லா விமான எதிா்ப்பு’ அமைப்பு வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் தாக்குதலை நிரூபிக்கும் வகையிலான தடயங்கள் பல இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் தோல்வியை மறைப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்தினர் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் ஜம்மு- காஷ்மீரின் பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
உரி, குப்வாரா (கர்னா, தங்தார்), பந்திபோரா (குரேஸ்), ரஜெளரி மற்றும் ஆர்.எஸ். புரா ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலை நடத்தியது.
இதில், உரியில் உள்ள மொஹுரா அருகே கார் மீது குண்டு பாய்ந்ததில் நர்கிஸ் பேகம் என்ற பெண் கொல்லப்பட்டார், மற்றொரு பெண் ஹஃபீசா காயமடைந்தார் காயமடைந்த ஹஃபீசா மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பாகிஸ்தான் ஏவுகணைகளை சர்வ சாதாரணமாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’!
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்திய நிலையில், ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது.
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பூஞ்ச், பாரமுல்லா, உரி, ரஜெளரி பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் 14 பேர் பலியாகினர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதல்களால் எல்லை கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, ஜம்மு-காஷ்மீர் அரசு அடுத்த இரண்டு நாள்களுக்கு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மூட உத்தரவிட்டுள்ளது.
வியாழக்கிழமை பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வியை அடுத்து நிலைமையை ஆய்வு செய்ய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை அதிகாலை ஜம்மு சென்றுள்ளார்.
எல்லை கிராமங்களில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையாகத் தயாராக உள்ளது என்று தேசியப் பாதுகாப்பிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.