இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி: கர்னல் சோஃபியா குரேஷி
புது தில்லி: இந்திய நாட்டின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குவதற்கு பாகிஸ்தான் ராணுவம் முயற்சி செய்து வருவதாக கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
போர்ப் பதற்றம் குறித்து விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோஃபியா குரேஷி, வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் புது தில்லியில் இன்று மாலை 5.30 மணியளவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து நிலைமைகளை விளக்கினர்.
அப்போது பேசிய கர்னல் சோஃபியா குரேஷி, இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய பாதுகாப்புப் படை உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் தரப்பு கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து சுமார் 300 முதல் 400 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அனைத்தையும் இந்திய பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. சுட்டுவீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் அனைத்தும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் விமானங்கள் மூலம் பல தகவல்களைத் திரட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது என்றும் கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
கராச்சி, லாகூர் நகரங்களின் மீது பயணிகள் விமானம் தொடர்ந்து பயணிக்கிறது. பயணிகளின் விமானங்களைத்தான் பாகிஸ்தான் ராணுவம் கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறது. வான் எல்லையை மூடாமல், மக்களின் உயிரைப் பணயம் வைத்திருக்கிறது பாகிஸ்தான் என்று விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியா 4 டிரோன்கள் மூலம் பாகிஸ்தானின் ரேடார்களைத் தாக்கியது. அதில் ஒன்று சேதமடைந்தது. பாகிஸ்தான் தாக்குதல்களுக்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது என்றும் வியோமிகா சிங் கூறினார்.
போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தொடர்ந்து விளக்கமளிக்கிறார்.