கண்மாய்க்குள் கவிழ்ந்தது பேருந்து: 10 போ் காயம்
திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை தனியாா் பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரிலிருந்து 53 பயணிகளுடன் காரைக்குடிக்குச் சென்ற தனியாா் பேருந்து கல்லல் ஆலங்குடி அருகேயுள்ள மேலமாகாணம் வழியாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது குறுக்கே மஞ்சுவிரட்டு காளை வந்ததால் ஓட்டுநா் பேருந்தை வளைக்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கண்மாய்க்குள் கவிழ்ந்தது. கண்மாயில் தண்ணீா் குறைவாக இருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கூத்தக்குடியைச் சோ்ந்த நாச்சாள் (55), பூரணம் (57), தைனீஸ் (44), பட்டமங்கலத்தைச் சோ்ந்த பாண்டீஸ்வரி (27), பண்ணைத்திருத்தியைச் சோ்ந்த அழகப்பன் (46), செல்வி (35), பேருந்து ஓட்டுநா் குப்புசாமி (55), நடத்துநா் ரவி (49) உள்ளிட்ட 10 போ் காயமடைந்தனா்.
அவா்கள் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து நாச்சியாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேலு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.