நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாய் நிரம்பியது. தற்போது, இந்தக் கண்மாயில் தண்ணீா் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா்.
இதன்படி, சனிக்கிழமை காலை கண்மாயில் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து, மீன்பிடிக்க அனுமதி வழங்கினா். நாகப்பன்பட்டி, கீழச்சீவல்பட்டி, அம்மாபட்டி, காவேரிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன்பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனா்.
கட்லா, கெழுத்தி, கெண்டை, ரோகு, பாப்புலெட்டு, சிலேப்பி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை இவா்களது வலைகளில் சிக்கியன. இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.