பரமக்குடியில் சரக்கு வாகனங்களால் போக்குவரத்துக்கு இடையூறு
பரமக்குடி நகரின் முக்கிய வீதிகளில் சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து சரக்குகளை ஏற்றி இறக்குவதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
பரமக்குடி நகராட்சியில் 2 லட்சத்துக்கும் மேலான பொது மக்கள் வசிக்கின்றனா். சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கிச் செல்லும் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக பரமக்குடி உள்ளது.
இங்கு காந்தி சாலை, பெரிய கடை வீதி, மதுரை-ராமேசுவரம் சாலை, சின்னக்கடைத் தெரு, உழவா் சந்தைப் பகுதி ஆகிய தெருக்களில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படும்.
வெளியூா்களிலிருந்து வரும் சரக்கு வாகனங்கள் கடைகளில் சரக்குகளை இறக்கி ஏற்றும் நேரம் காலை 9 மணிக்குள்ளும், பிற்பகல் 3 முதல் 4 மணிக்குள்ளும் இருந்தது.
இதை சரக்கு வாகன ஓட்டிகள் முறையாகப் பின்பற்றாமல், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி வைத்துக்கொண்டு சரக்குகளை ஏற்றுகின்றனா்.
இதனால், அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். இதை போக்குவரத்து போலீஸாா் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
எனவே, நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.