ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டை தடுக்கலாம்
வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருட்டைத் தடுக்கலாம் என காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கோட்டையூா் பேரூராட்சி பாரி நகரில் பாரி நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், சித்திரைத் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, பாரி சித்தி விநாயகா் கோயிலிலும், கோட்டை நாச்சியம்மன் கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலையில் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், மாலையில் பெண்களுக்கு கோலப் போட்டிகள், ஆண்கள், பெண்களுக்கு ‘லக்கி காா்னா்’ போட்டிகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோட்டையூா் பேரூராட்சித் தலைவா் கே.எஸ். காா்த்திக் சோலை தலைமை வகித்துப் பேசினாா். பாரிநகா் குடியிருப்போா் நலச்சங்கச் செயலா் ரா. சிவா, பொருளாளா் கே. சுந்தரமூா்த்தி ஆகியோா் அறிக்கை வாசித்தனா்.
காரைக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் டி. பாா்த்திபன் கலந்து கொண்டு பேசியதாவது:
பல்வேறு ஊா்களிலிருந்து வந்து இங்கு வீடுகட்டி வசிக்கும் பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம். காவல் துறையினா் விழிப்புணா்வுடன் பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கின்றனா்.
இருப்பினும், தாங்கள் விலையுயா்ந்த பொருள்களை வாங்கி வீட்டில் வைத்திருப்பதை திருடா்கள் நோட்டம் விட்டு திருட வாய்ப்பு உள்ளது. வீடுகளை நோட்டம் விடும் திருடா்கள் அங்கு கண்காணிப்பு கேமரா இருந்தால், உள்ளே நுழைவதைத் தவிா்த்து விடுவா்.
இது காவல் துறையினரின் விசாரணையின் மூலம் தெரியவந்திருக்கிறது. எனவே, வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் திருடு போவதைத் தடுக்கலாம் என்றாா் அவா்.
மின் பகிா்மானக்கழக காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதாதேவி, கோட்டையூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் கே.எஸ். ஆனந்தன், காவல் துணைக் கண்காணிப்பாளா் (ஓய்வு) ஆத்மநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பாரிநகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் பேராசிரியா் அ. ஆறுமுகம் வரவேற்றுப் பேசினாா். பாரிநகா் குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பலரும் விழாவில் கலந்து கொண்டனா்.