விராட் கோலியின் ஓய்வால் பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சர்வதேச சாதனை!
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ளதால், சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச சாதனை பாதுகாப்பாக உள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று (மே 12) அறிவித்தார். ரோஹித் சர்மாவைத் தொடர்ந்து, விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: தாயகம் திரும்பாத பஞ்சாப் கிங்ஸ் வெளிநாட்டு வீரர்கள்; ரிக்கி பாண்டிங் செய்தது என்ன?
பாதுகாப்பாக இருக்கும் சச்சினின் சாதனை
இந்திய அணிக்காக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகள் படைத்துள்ள முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடிக்க ஒருவரால் முடியும் என்றால், அது விராட் கோலியாகத்தான் இருக்கும் என்று கூறும் அளவுக்கு விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்துள்ளார்.
சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவரது இந்த சாதனையை விராட் கோலியால் மட்டுமே முறியடிக்க முடியும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்பட்டு வந்தது. 100-வது சதம் விளாசிய பிறகு பேசிய சச்சின் டெண்டுல்கர், தன்னுடைய இந்த சாதனையை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரால் முறியடிக்க முடியும் எனக் கூறியிருந்தார்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியால் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசி தன்னுடைய சாதனையை முறியடிக்க முடியும் என சச்சின் டெண்டுல்கர் கூறியிருந்த நிலையில், இருவரும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது அந்த சாதனையை அவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றியுள்ளது.
இதையும் படிக்க: ஒரு சகாப்தத்தின் முடிவு: கிரிக்கெட் உலகின் பாராட்டு மழையில் விராட் கோலி!
விராட் கோலி இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 82 சதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சதம் விளாசியுள்ளார். சர்வதேசப் போட்டிகளில் 100 சதங்கள் விளாச விராட் கோலிக்கு இன்னும் 18 சதங்கள் தேவைப்படுகின்றன.
சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க விராட் கோலிக்கு இன்னும் 19 சதங்கள் தேவைப்படுகின்றன. சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் தொடர்ந்து விளையாடவுள்ளார். வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த 27 போட்டிகளில் விராட் கோலி இடம்பெற்று விளையாடினாலும், எத்தனை போட்டிகளில் சதம் விளாசுவார் என்பது தெரியாது. 27 போட்டிகளில் அவரால் 19 சதங்கள் விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
சர்வதேசப் போட்டிகளில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி (82 சதங்கள்), ரிக்கி பாண்டிங் (71 சதங்கள்), குமார் சங்ககாரா (63 சதங்கள்), ஜாக் காலிஸ் (62 சதங்கள்), ஹாசிம் ஆம்லா (55 சதங்கள்), மஹேலா ஜெயவர்த்தனே (54 சதங்கள்), ஜோ ரூட் (53 சதங்கள்) எடுத்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இதையும் படிக்க: “ரன்களையும் தாண்டி...” விராட் கோலிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து!
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 51 சதங்களும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்களும் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.