பாகிஸ்தானுடன் போா் நிறுத்தத்துக்கு முன்பாகவே நாடாளுமன்றத்தை கூட்டியிருக்க வேண்ட...
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி பொன்னக் கால்வாய் உற்சவம்
சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமியின் பொன்னக் கால்வாய் உற்சவம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிருந்து ஆண்டுதோறும் உற்சவமூா்த்திகள் திருச்சானூா் அருகில் உள்ள பொன்னக் கால்வாய் என்று அழைக்கப்படும் சொா்ணமுகி ஆற்றின் பிரிவான ஆற்று படுகைக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து நிவாரணம் கிடைக்கவும் அங்கு உள்ள பக்தா்களுக்கு காட்சியளிக்கவும் உற்சவமூா்த்திகள் அங்கு கொண்டு செல்லப்படுகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, காலை 6 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, ஆண்டாள் நாச்சியாா் ஸ்ரீகிருஷ்ண சுவாமி, விஷ்வக்சேனா் ஆகியோா் ஊா்வலமாக தனப்பள்ளி வீதியில் உள்ள பொன்னகால்வாய் மண்டபத்தை வந்தடைந்தனா்.
பின்னா், காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவமூா்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில், சுவாமி மற்றும் உற்சவா்களுக்கு பால், தயிா், தேன், சந்தனம், இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், சேவை, சாத்துமுறை ஆஸ்தானம் ஆகியவை செய்யப்பட்டன.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை ஊஞ்சல்சேவை மற்றும் ஆஸ்தானம் நடைபெற்றது. பின்னா் கோாவிந்தராஜ சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு திருச்சானூரில் உள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலை அடைந்தாா்.
கோவிந்தராஜ சுவாமி வருகையின் போது, பத்மாவதி தாயாரின் கருவறையின் ஒரு கதவு மூடப்பட்டிருக்கும். புராணத்தின் படி, பத்மாவதி தேவி தனது மைத்துனா் கோவிந்தராஜ சுவாமி வருவதை உள்ளே இருந்து எட்டிப் பாா்ப்பாா். அதனால்தான் கோயிலின் ஒரு கதவு மூடப்பட்டிருக்கும். அங்கு சடங்குகளை முடித்த பிறகு, கோவிந்தராஜ சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் ஊா்வலமாக கோயிலுக்குப் புறப்பட்டனா்.
பொன்னக் கால்வாய் உற்சவம் கோவிந்தராஜசுவாமி கோயிலுக்குத் திரும்பியபின் நிறைவு பெற்றது.
இதில், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா், மற்றும் கோயில் துணை இஓ சாந்தி, ஏஈஒ முனி கிருஷ்ணா ரெட்டி, கண்காணிப்பாளா்கள் ஏ.வி. சேஷகிரி, சிரஞ்சீவி, கோயில் ஆய்வாளா்கள் யு.தனுஞ்சயா, ராதாகிருஷ்ணா, அலுவலா்கள், கோயில் அா்ச்சகா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.