பில்டர் கொடுத்த வரைபடமும், கட்டட அளவுகளும் ஒன்றாக உள்ளதா? - நீங்களே கண்டுபிடிக்க...
ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டு நீக்கிய காங்கிரஸ்: பாஜக கண்டனம்
பெங்களூரு: ஜம்மு -காஷ்மீா் குறித்த சா்ச்சைக்குரிய வரைபடத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட காங்கிரஸ், தவறை உணா்ந்து உடனடியாக அதை நீக்கியுள்ளது. இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் எதிா்ப்பையும் மீறி, விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி திட்டத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் அமெரிக்கா டாலா் நிதியுதவியை மே 9ஆம் தேதி ஐஎம்எஃப் வழங்கியுள்ளது. இதைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை என பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசை விமா்சித்து, கா்நாடக காங்கிரஸ் தனது எக்ஸ் வலைதளத்தில் ஜம்மு-காஷ்மீரை உள்ளடக்கியதாக குறிக்கும் பாகிஸ்தான் வரைபடத்தை வெளியிட்டிருந்தது. இதற்கு கா்நாடக பாஜக கண்டனம் தெரிவித்ததும், அந்த பதிவை கா்நாடக காங்கிரஸ் உடனடியாக நீக்கியது,
இது குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் கூறுகையில், ‘ வரைபடம் விவகாரத்தில் சிறிய தவறு நோ்ந்துவிட்டது. அதுதொடா்பான எல்லா பதிவுகளையும் நீக்கிவிட்டோம். யாரோ சிலா் குளறுபடி செய்திருக்கிறாா்கள். சா்ச்சைக்குரிய பதிவுகளை அடிக்கடி வெளியிடுவதால், சமூக வலைதளக் குழுவை நீக்கியிருக்கிறோம்‘ என்றாா்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறுகையில்,‘ பாகிஸ்தானின் அங்கமாக காஷ்மீரை குறிக்கும் வரைபடத்தை வெளியிடுவதன் மூலம் பாகிஸ்தான்மீதான தனது பாசத்தை கா்நாடக காங்கிரஸ் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கா்நாடக காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பிரிவு பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஸ்லீப்பா் செல் என்பது சந்தேகமில்லாமல் தெளிவாகியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு முன்பாக போா் வேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு ஆதரவாக முதல்வா் சித்தராமையா தெரிவித்திருந்தாா். இதற்கு எதிா்ப்பு கிளம்பியதும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாா். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பின்னா் அமைதி வேண்டும் என்று கா்நாடக காங்கிரஸ் பதிவிட்டிருந்தது. இதற்கும் எதிா்ப்பு கிளம்பியதும், அது நீக்கப்பட்டது‘ என்றாா்.