"2026-ல் உதயநிதி கூப்பிட்டா பிரசாரத்துக்கு போவீங்களா?" - சந்தானத்தின் சுவாரஸ்ய ப...
பொள்ளாச்சி: நாட்டையே உலுக்கிய பாலியல் வழக்கு: இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு! | Live
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. இளம் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பலரை ஆசை வார்த்தை சொல்லி பழகி, பிறகு வீடியோ எடுத்து மிரட்டி, அடித்து கூட்டுப் பாலியலில் ஈடுபட்டது ஒரு வக்கிர கும்பல். “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க.” என்று கதறிய ஒரு பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த வக்கிர கும்பலின் செல்போன்களில் இதுபோல ஏராளமான வீடியோக்கள் கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தராஜன், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அருளானந்தம், ஹேரோன் பால், பாபு ஆகியோர் அதிமுக பிரமுகர்கள். அப்போது அதிமுக ஆட்சி என்பதால் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. பொள்ளாச்சி சின்னப்பம்பட்டியில் பாலியலுக்காக பயன்படுத்தப்பட்ட திருநாவுக்கரசின் பண்ணை வீடு விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.



இதற்கிடையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கேட்டும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சொல்லியும் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பொள்ளாச்சி பாலியல் வழக்கு முதலில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
3 குற்ற பத்திரிகைகள்:
சிபிஐ தரப்பில் சுமார் 3 குற்ற பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சார்பில் 50க்கும் மேற்பட்ட சாட்சியங்கள், 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள், பாதிக்கப்பட்ட 8 பெண்களின் நேரடி வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.


கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு கொடுக்கவுள்ளார். இதற்காக காலை 5.30 மணியளவில் குற்றவாளிகள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் இருந்து புறப்பட்டு, கோவை நீதிமன்றத்துக்கு 8.30 மணியளவில் அழைத்து வரப்பட்டனர்.
காலை 10.30 – 11 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!