விவாகரத்து: பெண்ணுக்கு 'தங்க நகைகள்' திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? - நீதிமன்ற உத்தரவு என்ன?
திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.
எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதிகள் தேவன் ராமச்சந்திரன் மற்றும் எம்.பி. சினேகலதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது.
திருமண பந்தத்தில் இருந்து விவாகரத்து பெற்ற அந்த பெண்ணின், நகைகள் மற்றும் பரிசுகளை திரும்பத் தர வேண்டும் என்ற கோரிக்கைக்கு குடும்ப நல நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
"கடுமையான சட்ட ஆதாரங்களை வழங்குவது யதார்த்தமற்றது"
இந்த வழக்கு விசாரணையின்போது, "துரதிர்ஷ்டவசமாக கணவராலும் அவரது குடும்பத்தினராலும் மதிப்புமிக்க பொருட்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஏராளமான வழக்குகள் உள்ளன.
இதுபோன்ற பரிமாற்றங்கள் தனிப்பட்டதாகவும் முறைசாராததாகவும் இருப்பதனால், சொத்துக்களின் மீதான தங்களது உரிமையை நிலைநாட்டவும், முறைகேடாக பயன்படுத்துவதைத் தடுக்கவும் ஆவணங்களையும் ஆதாரங்களையும் திரட்டுவது பெண்களுக்கு கிட்டத்தட்ட முடியாத காரணமாக உள்ளது." எனத் தெரிவித்தது.
இதுபோன்ற வழக்குகளில் கடுமையான சட்ட ஆதாரங்களை வழங்குவது யதார்த்தமற்றதாக இருக்கலாம். திருமண பரிசுகள் தனிப்பட்டதாகவும், ஆவணப்படுத்தப்படாமலும் இருப்பதனால் அது கடினமாகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.
முறையான ஆவணங்கள் இல்லாத நகைகள் நிராகரிப்பு!
மனுதாரர் தரப்பில் 2010ம் ஆண்டு நடந்த திருமணத்தின்போது, 63 சவரன் தங்க நகை, 2 சவரன் சங்கிலி மற்றும் உறவினர்களால் வழங்கப்பட்ட 6 சவரன் ஆகியவை கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் தினசரி பயன்படுத்தப்படும் தாலி, வளையல் மற்றும் இரண்டு மோதிரங்கள் தவிர அனைத்தும் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்லி மாமியார் அறைக்கு எடுத்துச்செல்லப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு அவரது கணவர் கூடுதலாக 5 லட்சம் பணம் கேட்டதால் அவர்களது உறவு முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த பெண் தனது பெற்றோர் நிலையான வைப்புத் தொகையில் இருந்த பணத்தில் நகை வாங்கிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்டவரிடம் (கணவர்), 59.5 பவுன் நகை அல்லது அதன் இன்றைய மதிப்பிற்கான பணத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும், உறவினர்களால் வழங்கப்பட்டதாகக் கூறும் 6 பவுன் நகைக்கு தக்க ஆதாரங்கள் இல்லாததால் அதனை நிராகரித்துள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதேப்போல வீட்டுப் பொருட்களைக் கேட்டதற்கும், அவை தவறாக பயன்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால், அவற்றையும் நிராகரிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
"நீதிமன்றங்கள் நடைமுறை சிரமங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்"
இதுபோன்ற வழக்குகளில் உள்ள குழறுபடிகளைப் பற்றி பேசிய நீதிமன்றம், `திருமணங்களின் போது மணப்பெண்ணுக்கு வழங்கப்படும் நகைகள் பாதுகாப்பாக வைத்திருத்தல் அல்லது பாரம்பரிய பழக்கவழக்கம் என்ற போர்வையில் அவரிடம் இருந்து பறிக்கப்படுகிறது. சில நேரங்களில் பெண்ணுக்கு அந்த நகைகளை அணுகுவதற்கான வாய்ப்பே கிடைப்பதில்லை.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்தப் பணமாற்றங்களுக்கான எழுத்துப்பூர்வ பதிவேடு அல்லது ரசீது எதுவும் அந்த பெண்ணிடம் இருப்பதில்லை.
குடும்ப வன்முறை, வரதட்சணை துன்புறுத்தல் அல்லது விவாகரத்து போன்ற சச்சரவுகள் எழும்போது இது மிகவும் சிக்கலாகிறது’ என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
அத்துடன் "மணப்பெண்ணின் நகை தவறாக பயன்படுத்தப்பட்டாலும், அல்லது அவருக்கு ஒருபோதும் திருப்பித் தரப்படவில்லை என்றாலும் அவரால் எதுவும் செய்ய முடிவதில்லை.
மணப்பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொருட்களின் பட்டியல், அதற்கான ஒப்புதல் மிக அரிதாகவே அவருக்குக் கிடைப்பதால், மணப்பெண் அந்தப் பொருட்களின் மீதான உரிமையை நிரூபிப்பது கடினமாகிறது.
நீதிமன்றங்கள் இந்த நடைமுறைச் சிரமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் குற்றவியல் வழக்குகளைப் போல கடுமையான சட்ட ஆதாரங்களை வலியுறுத்த முடியாது," என்று நீதிமன்றம் கூறியது.