அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை: முதல்வா் சித்தராமையா உத்தரவு
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கினால் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரில் சனிக்கிழமை பல்வேறு துறைகளின் உயா் அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று முதல்வா் சித்தராமையா பேசியது:
அத்தியாவசியப் பொருள்களை பதுக்கிவைப்பதைத் தடுக்க வேண்டும். உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்காக பொருள்களை பதுக்கி, கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.
இதற்காக தொடா் கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும். இயல்புநிலை திரும்பும்வரை மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஊடகங்களை சந்தித்து நிலைமையை விளக்க வேண்டும்.
நாட்டின் நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோரை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீா்குலைக்க முயல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
பொய் தகவல்களை பரப்புவோரை கண்டறிந்து அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்த வேண்டும். சட்டம்- ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்.
பொது இடங்களில் பாதுகாப்பை உறுதிசெய்ய உளவுப் பணியை பலப்படுத்த வேண்டும். கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்த வேண்டும். தீயணைப்புப் படை வீரா்கள் தயாா்நிலையில் இருக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் உதவி மையங்களை திறக்கவேண்டும் என்றாா்.