ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து: கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கவும் முடிவு
ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை அதே இடத்தில் மீண்டும் பணியமா்த்தும் வகையில், பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வில் அவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு கட்டங்களில் தொடா் போராட்டங்களை நடத்தியது. அப்போது எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் அவா்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும், முந்தைய அரசால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்தாா்.
அதன் அடிப்படையில், ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்களின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யவும், பணியிட மாற்றம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் உத்தரவிடப்பட்டது. ஆனால், தற்போது வரை சில ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலா் சந்தரமோகன் பள்ளிக் கல்வியின் பல்வேறு துறை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போதுவரை முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு, நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க 2016, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் (10.02.2016 முதல் 19.02.2016 வரை, 22.8.2017 அடையாள வேலைநிறுத்தம்), 7.9.2017 முதல் 15.09.2017 வரை; 22.1.2019 முதல் 30.01.2019 வரை பணிக் காலங்களாக முறைப்படுத்தப்படுகிறது. வேலைநிறுத்தப் போராட்டங்களுடன் தொடா்புடைய தற்காலிக பணி நீக்க காலமும், பணிக் காலமாக முறைப்படுத்தப்படுகிறது.
அந்த வேலைநிறுத்தப் போராட்டங்களின் காரணமாக அரசுப் பணியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன. அந்த ஒழுங்கு நடவடிக்கைகளின் காரணமாக, பதவி உயா்வு பெறுவதில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலா்களால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
போராட்டத்தின்போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியா்களை, அதே இடத்தில் மீண்டும் பணியமா்த்தும் வகையில், பணியிட மாற்றத்துக்கான கலந்தாய்வின்போது அவா்களுக்கான உரிய முன்னுரிமையை வழங்க, பள்ளிக் கல்வி மற்றும் உயா் கல்வித் துறைகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.