செய்திகள் :

சொல்லப் போனால்... 1965 இந்தியா – பாகிஸ்தான் போரும் இன்றும்!

post image

வங்கதேச விடுதலை, சியாச்சின், கார்கில், துல்லிய தாக்குதல் என்றெல்லாம் அவ்வப்போது சண்டைகள் அல்லது மோதல்கள் நடந்திருந்தபோதிலும் – இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன், 1965-ல், நடந்ததுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான முழு அளவிலான போர் என்று குறிப்பிடலாம்.

1962-ல் நடைபெற்ற இந்திய – சீனப் போர் முடிந்து பாதிப்புகளிலிருந்து இந்தியா மீண்டெழுந்துகொண்டிருந்த வேளை; மீண்டும் ஒரு போரை எதிர்கொள்ள நேரிட்டது இந்தியாவுக்கு.

1965 ஏப். 24 ஆம் தேதியை இந்தப் போருக்கான தொடக்கப் புள்ளி என்று கொள்ளலாம்.

பாகிஸ்தானின் எல்லையில் சிந்து மாகாணத்தையொட்டியுள்ள இந்திய காவல் சாவடிகளின் மீது தாக்குதல் நடத்தி, குஜராத்திலுள்ள கட்ச் உப்புவெளிக்குள் சுமார் 6 முதல் 8 மைல் தொலைவுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஊருவியது. இதேகாலத்தில் சிறிதுசிறிதாக காஷ்மீர்ப் பகுதிக்குள்ளும் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவத் தொடங்கினர்.

இதைத் தடுப்பதற்காக இந்தியப் படைகளும் இங்கே நகர்த்தப்பட, மேலும் 4 காவல் சாவடிகளைத் தாக்கிக் கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவமோ பீரங்கிகளையும் கொண்டுவந்தது. பதற்றமும் அதிகரித்தது. எனினும், பிரிட்டன் தலையிட்டுப் பேசியதன் அடிப்படையில் இரு நாடுகளிடையே போர் நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு, 1965 ஜூலை 1-ல் கட்ச் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது; இந்திய மண்ணிலிருந்து பாகிஸ்தான் வெளியேறியது. இந்த அமைதியை ஏற்படுத்துவதில் பிரிட்டிஷ் பிரதமர் ஹெரால்ட் வில்சன் பெரும்பங்காற்றினார்.

எனினும், ஜம்மு – காஷ்மீர் பகுதியில் இந்திய ஆட்சிக்கு எதிராகப் பெரும் கலகத்தைத் (அதாவது புரட்சியை!) தூண்டும் திட்டத்துடன் பாகிஸ்தான் ராணுவத்தினர், ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் பெருமளவில் – ஆயிரக்கணக்கில் - ஊடுருவத் தொடங்கினர்.

1965 ஆக. 8-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பீர் தஸ்தகீர் விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதாகக் காட்டிக்கொண்டு, பழங்குடிகள் போலும் சாதாரண மக்கள் போலும் காஷ்மீருக்குள் பாகிஸ்தானிய ராணுவத்தினர் ஊடுருவினர். மொத்த எண்ணிக்கை 30 ஆயிரம் வரை இருக்கலாம் (பாதுகாப்பு அமைச்சகக் கட்டுரை தரும் தகவல்). ஸ்ரீநகரைத் துண்டித்துக் கைப்பற்றும் நோக்கில் ஜம்மு, கார்கில் போன்ற இடங்களிலிருந்து வரும் சாலைகளையும் இவர்கள் தடுத்தனர்.

எனினும், பாகிஸ்தான் வகுத்த, இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சித் திட்டத்தை உள்ளூர் மக்கள் கொஞ்சமும் ஆதரிக்காமல் நிராகரித்துவிட்டதால் பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த முயற்சி பலிக்கவில்லை (சாதாரண மக்கள் எப்போதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறார்கள்!). எனினும், இந்தக் காலகட்டத்தில் தொடர்ந்து எல்லைப் பகுதிகளிலும் ஊடுருவல்காரர்களுடனும் மோதல்களாகத் தொடங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான போராகவே மாறிவிட்டது.

போர்ச் சூழல் தொடங்கியதுமே நாட்டின் செய்தித் தாள்கள் மோதல் செய்திகளால் நிரம்பி வழியத் தொடங்கிவிட்டன. அன்றைய காலத்தில் நாளிதழ்களும் வானொலியும் மட்டுமே தகவல்களைப் பெறுவதற்காக மக்களுக்கு இருந்த சாதனங்கள். ‘தினமணி’யின் பக்கங்களைப் புரட்டினால் விரிவான செய்திகள், அலசல்கள், கட்டுரைகள், தலையங்கங்கள்.

ஆக. 14-ல் காஷ்மீர் சென்று திரும்பிய அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரி லால் நந்தா, ஆக. 5 ஆம் தேதிக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்து ஆயுதந்தாங்கிய 3,200 பேரும் அவர்களுக்கு உதவியாக 800 பேரும் ஊடுருவியிருப்பதாகத் தெரிவித்தார். ஆங்காங்கே இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் ஊடுருவியவர்கள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.

ஆக. 15-ல் செங்கோட்டையில் சுதந்திர தின உரையில், காஷ்மீரில் இம்மியளவு நிலம்கூட பாகிஸ்தானுக்குக் கிடைக்காது என்றும் கலகம் எழும் என்ற எண்ணத்தில் அவர்கள் மேற்கொண்ட முயற்சி தோற்றதையும் சுட்டிக்காட்டிப் பேசினார் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி.

ஆக. 16, 17-ல் ஸ்ரீநகரில் இரவு நேர ஊரடங்கையும் ஜம்முவில் 144 தடை உத்தரவையும் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். ஸ்ரீநகர் அருகே யூஸ்மார்க் என்ற இடத்தில் காவல்நிலையத்தைக் கைப்பற்ற முனைந்த பாகிஸ்தான் படையினரின் முயற்சியை 12 மணி நேர சண்டைக்குப் பின் இந்திய வீரர்கள் முறியடித்தனர். குங்புல் என்ற கிராமத்தையே ஊடுருவல்காரர்கள் தீவைத்துக்கொளுத்தினர்.

இதனிடையே, இரு நாடுகளிடையே உறவுகள் மோசமடைந்துள்ளதாகத் தெரிவித்து, கட்ச் தொடர்பாகப் பேச்சு நடத்துவதற்காக இந்தியா வரவிருந்த பாகிஸ்தான் பிரதமர் பூட்டோவை வர வேண்டாமெனப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அறிவித்துவிட்டார்.

காஷ்மீரில் ஊடுருவல்காரர்கள் தொடர்ந்து ஒழித்துக் கட்டப்படுவதாகவும் இதுவரை கொல்லப்பட்ட அல்லது பிடிபட்ட பாகிஸ்தானிகளின் மொத்த எண்ணிக்கை 800 என்றும் இவர்களில் 6 பேர் அதிகாரிகள் என்றும் ஆக. 20 ஆம் தேதி இந்திய அரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

ஆக. 22-ல் நியூ யார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியொன்றில், இரு நாடுகளும் போருக்கு அருகில் இருக்கின்றன. ஆக்கிரமிப்பு நீடித்தால் பாகிஸ்தானிலும் தாக்குதல் நடத்துவோம் என்று சாஸ்திரி எச்சரித்தார். பாகிஸ்தானியர்கள் ஊடுருவலும் முறியடிப்பும் தொடர்ந்த நிலையில் பாகிஸ்தான் நிலைகளைத் தாக்குவோம் என்றும் அறிவித்தார் அவர்.

ஆக. 25 ஆம் தேதி, காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்தக் கோட்டைத் தாண்டி, இரு மைல்கள் தொலைவுக்கு இந்தியப் படைகள் முன்னேறி, இரு இடங்களில் புது நிலைகளை அமைத்துள்ளதாகவும் மக்களவையிலேயே உறுப்பினர்களின் பெரும் வரவேற்புக்கு இடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் யஷ்வந்த்ராவ் சவாண் அறிவித்தார்.

அடுத்தடுத்த நாள்களில் மேலும் பல நிலைகளை இந்திய ராணுவத்தினர் கைப்பற்றி ஊடுருவல்காரர்களையும் விரட்டியடித்தனர். இதனிடையே, அமைச்சர் சவாணுடன் ஸ்ரீநகருக்குச் சென்ற குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், பதிவு செய்யப்பட்ட வானொலி உரையில், எந்த நேரத்திலும் எத்தகைய தாக்குதலுக்கும் தயாராக இருக்க வேண்டும்; தற்காப்புக்குத் தாக்குதலும் சில நேரம் அவசியம் என்று அழைப்பு விடுத்தார்.

ஊரி பகுதியிலும் எல்லையைத் தாண்டி இந்திய ராணுவம் உள்நுழைந்ததுடன்,  ஊடுருவல்காரர்கள் முழுவதும் வெளியேறாவிட்டால் சமாதானம் இல்லை என்றும் இந்தியா அறிவித்தது. பல இடங்களிலும் மோதல்கள் நடைபெற்றன. பாகிஸ்தான் தரப்பிலிருந்து பீரங்கிகள் மூலமும் சுடத் தொடங்கினர்.

ஊரிக்குத் தெற்கேயுள்ள ஹாஜிபீர் கணவாயை இந்திய ராணுவம் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக மக்களவையில் சவாண் அறிவித்தார்.

செப். 1-ல் சாம்ப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கவச வாகனங்களுடன்  நுழைந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியப் படை விமானங்களும் போரில் இறங்கின. குண்டுவீச்சில் 10 பீரங்கிகள் அழிக்கப்பட்டன. நான்கு படைநிலைகள் கைப்பற்றப்பட்டன. அடுத்தடுத்த நாள்களில் பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. போர் தீவிரமாகிவிட்டதாக மக்களவையில் சவாண் அறிவித்தார்.

செப். 3 – சாம்ப் – அக்னூர் பகுதியில் வானில் நடந்த கடும் போரில் இரு பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. முஸாபராபாத் நோக்கி இந்தியப் படைகள் முன்னேறி, 13 மைல்களில் நிலைகொண்டிருந்தன.

மறுநாளும் விமான சண்டை தொடர்ந்தது. மேலும் இரு பாகிஸ்தான் விமானங்கள் வீழ்த்தப்பட்டன. முதல் முறையாக ஏவுகணைகளை பாகிஸ்தான் விமானப் படை  பயன்படுத்தியது (இன்றைக்கு ஏவுகணைகள் இல்லாத போரை நினைத்துக்கூட பார்க்க முடியாது). சாம்ப் முனையில் கடும் போர் நடைபெற்றது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவை கூடியது. காஷ்மீர் போருக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு என்று முதன்மைச் செயலர் ஊ தாண்ட் அறிவித்தார்.

செப். 5 - பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தின. நெருக்கடியான காலகட்டம், ஆனால், இறுதியான வெற்றி நமதே என்று குடியரசுத் தலைவர் எஸ். ராதாகிருஷ்ணனும் பாகிஸ்தானின் இடையறாத தொல்லைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பிரதமர் சாஸ்திரியும் முழக்கமிட்டனர்.

செப். 6 – நிலைமை மேலும் தீவிரமானது. அமிருதசரஸ் நகர் பகுதியை நோக்கி பாகிஸ்தான் விமானங்கள் பறந்த நிலையில், பஞ்சாபை பாகிஸ்தான் தாக்கலாம் எனத் தகவல்கள் கிடைக்கவே, முன்னெச்சரிக்கையாக இந்தியப் படைகள் எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து லாகூரை நோக்கித் தலைவாசலை எட்டின. (அன்றைய மேற்கு) பாகிஸ்தானில் பல ராணுவ இலக்குகளையும் இந்திய விமானப் படை தாக்கியது.

பாகிஸ்தான் முழுவதும் நெருக்கடி நிலையை அறிவித்த அதிபர் அய்யூப் கான், நாம் போரில் ஈடுபட்டிருக்கிறோம் என்று நாட்டு மக்களுக்காற்றிய வானொலி உரையில் குறிப்பிட்டார்.

செப். 7 – லாகூர், ராவல்பிண்டி ஆகியவற்றுக்கு அருகிலுள்ள விமான தளங்களின் மீது இந்திய விமானங்கள் குண்டுவீசின. இப்போதும் நடப்பதைப் போலவே தில்லி, மும்பை போன்ற பெருநகர்களில் முழு இருட்டடிப்பு நடைமுறைக்கு வந்தது. அமிருதசரஸ் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆறு முறை பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசின. ஒரு விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது. இன்றைய போரில் இந்தியத் தரப்பில் 8 விமானங்கள் இழக்கப்பட்டன.

செப். 8 – மேலும் இரு முனைகளில், ராஜஸ்தான், ஜம்மு ஆகிய பகுதிகளிலிருந்து பாகிஸ்தானுக்குள் இந்தியப் படைகள் நுழைந்தன. இரு நாள்களில் பாகிஸ்தானின் 21 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக சவாண் அறிவித்தார்.

செப். 9 – பாகிஸ்தான் பீரங்கிகளில் பாதி அழிக்கப்பட்டுவிட்டதாக இந்தியா அறிவித்தது. 23 பீரங்கிகள் கொண்டுசெல்லப்பட்ட ரயிலை இந்திய விமானங்கள் தகர்த்தன. சியால்கோட், லாகூர், சிந்து முனைகளில் கடும் போர் நடந்துகொண்டிருந்தது (சென்னையிலும் இரவு 9 மணிக்குப் பிறகு தெரு விளக்குகள் எரியாது என்று முதல்வராக இருந்த எம். பக்தவத்சலம் அறிவித்தார்).

செப். 10 – லாகூரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறுவதாக பிபிசி செய்தி தெரிவித்தது. சியால்கோட் முனையில் இந்திய ராணுவம் பெரும் முன்னேற்றம் கண்டது. அமிர்தசரஸில் மூன்று பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

செப். 11 - லாகூரில் நடந்த சண்டையில் பாகிஸ்தானின் ஒரு தளபதியும் பிரிகேடியரும் கொல்லப்பட்டனர். 17 டாங்குகள் கைப்பற்றப்பட்டன.

போர்முனைப் பகுதிகளைப் பார்வையிட உள்துறை அமைச்சர் நந்தாவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த காமராஜரும் சென்றபோது, வாகா பகுதியில் காராண்டா காவல்நிலையம் அருகே இவர்களுடைய காருக்கு 50 மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் வீசிய குண்டு விழுந்தது. நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு எதுவுமில்லை (எப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர்!).

செப். 12 – ஊரிக்கு வடக்கே இரு முனைகள் பிடிபட்டன. பாகிஸ்தான் தரப்பில் இதுவரை 246 டாங்குகள் அழிந்தன. வாகா, காசூர் தடங்களில் படைகள் முன்னேறிக்கொண்டிருக்கின்றன. சியால்கோட்டில் ஆயுதக் கிடங்கு வீழ்ந்தது.

செப். 13 – ஜம்முவின் மீது பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். குருதாஸ்பூரில் பாகிஸ்தான் விமானம் வீழ்த்தப்பட்டது. ஊரி, பூஞ்ச் வளைவு முழுவதும் இந்தியா வசம் வந்தது. மும்பையில் பறந்த விமானம் விரட்டப்பட்டது.

செப். 14 – பெஷாவர் ராணுவ விமான தளம் தாக்கப்பட்டது. அகர்தலா, பாரக்பூர் மீது பாகிஸ்தான் படை குண்டு வீசியது. ஜோத்பூர் மீதும் பாகிஸ்தான் விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின.

செப். 15 – சியால்கோட் பகுதியில் ரயில் பாதையைக் கைப்பற்றியது இந்திய ராணுவம். அஸ்ஸாம் எல்லையில் நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

இந்தியத் தரப்பில் 612 பேர் பலியானதாகவும் 60 டாங்குகள் வரை நாசமானதாகவும் பாகிஸ்தான் தரப்பில் 55 விமானங்களும் 284 டாங்குகளும் அழிந்ததாகவும் 1847 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

செப். 16 – லாகூரிலிருந்து 7 மைல் தொலைவிலுள்ள புர்க்கி நகர் பிடிபட்டதாக இந்தியா அறிவித்தது. மேலும் உக்கிரமான போரில் இரு தரப்பிலும் பெரும் நாசங்கள் விளைந்தன.

ஊ தாண்ட்டின் போர் நிறுத்த யோசனையை பாகிஸ்தான் ஏற்க மறுத்துவிட்டதால் போரைத் தொடருவதைத் தவிர வேறு வழியில்லை; எந்தவித சிரமத்துக்கும் தியாகத்துக்கும் மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அழைப்பு விடுத்தார்.

செப். 16 – இந்தக் களேபரத்துக்கு நடுவே, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதைப் போல, சிக்கிம் எல்லைப் பகுதியிலுள்ள ராணுவ நிலைகளை எல்லாம் இந்தியா அகற்ற வேண்டும் என்று திடீரென சீனா எச்சரித்தது.

செப். 17 –  இதுபோன்ற பயமுறுத்தல்களுக்கு எல்லாம் அஞ்ச மாட்டோம்; சீனா தாக்கினால் உறுதியாகப் போராடுவோம் என்று பதிலடி கொடுத்தார் பிரதமர் சாஸ்திரி.

செப். 18 – சிக்கிம், லடாக்கையொட்டிய எல்லைப் பகுதிகளில் சீனப் படைகள் குவிக்கப்பட்டன. பிரதமர் சாஸ்திரியும் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவாணும் அவசர ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் பகுதிகளில் சண்டை நீடித்தது.

செப். 19 – சிந்து பகுதியில் 29 மைல் தொலைவுக்கு பாகிஸ்தானுக்குள் முன்னேறியது இந்தியப் படைகள். கெடுவை மேலும் 3 நாள்களுக்கு சீனா நீடித்தது. சீனா தாக்கினால் தக்க பதிலடி தரப்படும் என்று எச்சரித்தார் சவாண்.

செப். 20 – செப்டம்பர் 22 ஆம் தேதி பகல் 12.30 மணிக்குள் போரை நிறுத்த வேண்டுமென ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவை தீர்மானம் நிறைவேற்றி, இரு நாடுகளுக்கும் அறிவுறுத்தியது (அன்றைய மொழிநடையில் கட்டளை பிறப்பித்தது!).

சீன ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மக்களவையில் உரையாற்றிய பிரதமர் சாஸ்திரி குறிப்பிட்டார். காஷ்மீர் பற்றிய யோசனை சொல்வதற்கான எவ்வித உரிமையும் சீனாவுக்கு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

செப். 21 – மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பதைப் போல சிக்கிம் எல்லையில் சீனாவும் தாக்கத் தொடங்கியது. இந்திய – சீன ராணுவத்தினரிடையே சிக்கிம் எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

சியால்கோட்டில் பெரும் பஞ்சம் ஏற்படவே மக்கள் கூட்டங்கூட்டமாக வெளியேறத் தொடங்கினர். பாகிஸ்தான் குண்டுவீச்சுகளில் ஜம்மு பகுதியில் மட்டும் 100 பேர் வரை பலியானதாக அறிவிக்கப்பட்டது. கட்ச் எல்லை அருகே பாகிஸ்தான் ராடார் தளத்தை இந்தியா அழித்தது.

செப். 22 – ஒருவழியாக, இந்தியா – பாகிஸ்தான் போர், ஐ.நா. பாதுகாப்பு அவையின் தீர்மானத்துக்கு இணங்க செப். 22 இரவு நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போரை நிறுத்த தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மக்களவையில் பிரதமர் சாஸ்திரி அறிவித்தார். அதிகாலை 3 மணிக்குப் போரை நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிபர் அய்யூப் கான் அறிவித்தார்.

இந்த நாளில் இந்திய எல்லையிலிருந்து பாகிஸ்தானுக்குள் லாகூர் முனையில் சுமார் 8 முதல் 10 மைல் தொலைவும் சியால்கோட் முனையில் 15 முதல் 16 மைல் தொலைவும் சிந்து முனையில் 30 மைல் தொலைவும் இந்தியப் படைகள் முன்னேறி நிலைகொண்டிருந்தன.

ஏறத்தாழ ஆறு வாரங்கள் நீடித்த இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது. போரின் இறுதியில் இந்தியா 1920 சதுர கி.மீ. பரப்பையும் பாகிஸ்தான் 540 ச.கி.மீ. பரப்பையும் கைப்பற்றின. இந்தியத் தரப்பில் 2,862 வீரர்களும் பாகிஸ்தான் தரப்பில் 5800 வீரர்களும் உயிரிழந்தனர். இந்தியத் தரப்பில் 97 பீரங்கிகளும் பாகிஸ்தான் தரப்பில் 450 பீரங்கிகளும் இழக்கப்பட்டன அல்லது சேதமுற்றன என்று பிபிசி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், போர்களைப் பொருத்தவரை உண்மையான நிலவரத்தை யாராலும் உறுதி செய்ய இயலாது. ஏனெனில் போரில் முதல் பலி (இன்னும் சரியாகத் தமிழில் களப்பலி என்றுகூட சொல்லலாம்) உண்மைதான் என்பது காலங்காலமாகச் சொல்லப்படும் புகழ்பெற்ற தொடர்!

1965 போரில் (அல்லது எந்தவொரு போரிலும்) இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உயிரிழந்த சாதாரண மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதற்கு உறுதியான தகவல்கள் எதுவுமில்லை; உறுதி செய்யவும் இயலாது. எந்த ஒரு நாடுமே போரில் தனக்கு அதிக இழப்புகள் ஏற்பட்டதாகக் காட்டிக் கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. வரலாற்றின் பக்கங்களில் இவர்களுக்கு எல்லாம் வெறும் எண்களாகக்கூட இடம் கிடைப்பதில்லை.

காஷ்மீரிலுள்ள பஹல்காமில் விரல்விட்டு எண்ணக்கூடிய யாரோ மிகச் சில நபர்கள், சுற்றுலா பயணிகளில் 26 பேரைக் கண்மூடித் தனமாகச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிவிட்டனர். அவர்களைப் பற்றி இன்னமும் சரியான விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிலையில் புகையத் தொடங்கிய நெருப்பு, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, கனன்று தீச்சுவாலைகளைக் கக்கத் தொடங்கியிருந்தது.

எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள். சாதாரண மக்களின் நிலைமை படுமோசம். எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்குமிடையிலான  இன்னொரு போராக மாறாகிவிடுமோ, எத்தனை காலத்துக்குத் தொடருமோ, எப்படி முடியுமோ என்றெல்லாம் அச்சம்.

தவிர, மோதல், சண்டை என்பனவற்றைத் தாண்டி இப்போது போர் என்றொன்று மூண்டால் நிச்சயமாக 1965-ல் நடந்ததைப் போல இருக்காது. என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்கவோ, கணக்கிடவோ முடியாது.

ஏனெனில், ராணுவங்களின் ஆயுதங்கள் மிகவும் நவீனமாகிவிட்டன. வீர்ர்கள் எங்கேயும் உடனடியாக நேரடியாகக் களமிறங்க வேண்டிய அவசியமே இல்லை. ட்ரோன்கள் என்ற குட்டிச் சாத்தான்களைச் சமாளிப்பதே பெரும்பாடு. எந்த இடத்தில் வேண்டுமானாலும் எத்தகைய கெடுதல்களை வேண்டுமானாலும் அவற்றால் இழைக்க முடியும்.

இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளிடமும் ஏவுகணைகள் இருக்கின்றன, அணுகுண்டுகளும் இருக்கின்றன. ஒருவேளை இவையெல்லாம்  தீர்ந்துபோனால் கடனுக்கு என்றாலும்கூட சப்ளை செய்வதற்கென்ற சில நாடுகள் காத்துக் கொண்டுமிருக்கின்றன (ஏனென்றால் அதுதான் இன்று உலகின் மிகப் பெரிய வியாபாரம்!).

நல்லவேளையாக, போர் நிறுத்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அவர் அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்தாற்போல இந்திய, பாகிஸ்தான் தரப்புகளிலும் அறிவிப்பை உறுதிசெய்தனர். பேச்சு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது (ஆனாலும், தாக்குதல்கள் தொடருவதாகத் தகவல்).

உலகமும் உலக நாடுகளின் பொருளாதாரச் சூழலும் இப்போது இருக்கிற நிலைமையில், ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை நகர்த்தவே சிரமப்படும் வேளையில் – இந்தியாவோ, பாகிஸ்தானோ, ரஷியாவோ, உக்ரைனோ, இஸ்ரேலோ, காஸாவோ - எந்தவொரு நாட்டின் மக்களாலும் ஒரு போரை தாங்கிக் கொள்ள இயலாது. மாற்று ஒன்றே மாற்று.

புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

சொல்லப் போனால்... சாதிவாரிக் கணக்கெடுப்பு என்ற இருமுனையும் கூர்கொண்ட கத்தி!

“காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறிப்பிடும் சமூக – பொருளாதார ஆய்வு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது தனிநபர் சொத்துரிமைக்கு எதிரானது; மாவோ கருத்தியலின் எதிரொலி. காங்கிரஸை ஆட்சி அமைக்கத் தேர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

பைன் மரக் காடுகளுக்கு நடுவிலான பெரும் புல்வெளி. திடீரென மரங்களுக்குப் பின்னிருந்து சீருடையணிந்த அடையாளந் தெரியாத சிலர் துப்பாக்கியேந்தியபடி வெளியே வருகின்றனர். திரண்டிருந்த மக்களை நோக்கிச் சுடுகின்றனர... மேலும் பார்க்க

சொல்லப் போனால்... கூட்டணிக் கட்சி பரிதாபங்கள்!

கூட்டணியா? கூடவே கூடாது... முடியவே முடியாது... நாங்கள்ளாம் யாரு?... இவிங்களோட கூட்டணி சேர்ந்து எங்களுக்கு ஆகப் போவது என்னங்க? அதெல்லாம் சரியா வராதுங்க... நாங்க இல்லாம, போன தேர்தல்ல என்ன நடந்துச்சு பார... மேலும் பார்க்க