காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் என அழைக்கப்படும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று(மே 11) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணி அளவில் கோயிலின் மூலவர் பகுதியில் இருந்து உற்சவர் வரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் கொடி மரத்தின் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின் கருட முகம் பொறித்த பிரம்மோற்சவத்தின் விழாக் கொடியை கோயில் பட்டச்சாரியார்கள் மந்திரங்கள் சொல்லி கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மோற்சவத்தை ஒட்டி காலை, மாலை, என இரு வேளையும் வரதராஜப் பெருமாள் பல்வேறு வாகனங்களில் அலங்காரமாகி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிக்க உள்ளார்.
கொடியேற்றத்தை ஒட்டி அலங்கார மண்டபத்தில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி கோயில் உள்பிரகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவங்களான கருட சேவை உற்சவம் மே 13ம் தேதியும், திருத்தேர் உற்சவம் மே 17-ம் தேதியும் நடைபெறுகிறது .மே மாதம் 19ஆம் தேதி தீர்த்த வாரியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.